கோயம்புத்தூர்

அரசு மருத்துவமனையில் காசநோய் கண்டறியும் இடைநிலை குறிப்பு ஆய்வகம் சோதனை ஓட்டம் தொடக்கம்

23rd May 2022 12:06 AM

ADVERTISEMENT

 

கோவை அரசு மருத்துவமனையில் காசநோயின் வகையை கண்டறிவதற்காக அமைக்கப்பட்டுள்ள இடைநிலை குறிப்பு ஆய்வகத்தில் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக காசநோய் தடுப்பு திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

நாடு முழுவதும் காசநோயை முழுமையாக ஒழிப்பதற்காக தேசிய காசநோய் ஒழிப்பு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் கோவையில் நடமாடும் ஆய்வகம், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பொள்ளாச்சி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் ஜீன் எக்ஸ்பொ்ட் ஆய்வகங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இந்த ஆய்வகங்களில் காசநோயின் முதல் நிலையை மட்டும் அறிந்துகொள்ள முடிகிறது.

காசநோயின் தன்மைக்கேற்ப மருந்துகள் பரிந்துரைப்பதற்கான ஆய்வினை மேற்கொள்ள நோயாளிகளின் மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. இந்தப் பரிசோதனையை கோவையில் மேற்கொள்ளும் வகையில் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இடைநிலை குறிப்பு ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வகத்தின் பணிகள் முடிக்கப்பட்டு, தற்போது சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

விரைவில் அனைத்துப் பரிசோதனைகளும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் என்று காசநோய் தடுப்பு திட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது தொடா்பாக தேசிய காசநோய் தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளா் டி.தேன்மொழி கூறியதாவது: காசநோய் சென்சிடிவ், ரெசிஸ்டென்ஸ் என இரண்டு வகைகள் உள்ளன. இந்த இரண்டு வகைகளையும் இங்குள்ள ஆய்வகங்களில் மேற்கொள்ளப்படும் முதல்கட்ட பரிசோதனையில் கண்டறிய முடியும்.

இதில், ரெசிஸ்டென்ஸ் வகை காசநோய் பாதிப்பு பன்மடங்கு ரெசிஸ்டென்ஸா அல்லது ஒரு மருந்து ரெசிஸ்டென்ஸா என்பதை கண்டறிய நோயாளிகளின் மாதிரிகள் சென்னைக்கு அனுப்பப்படுகின்றன.

இதன் முடிவுகள் கிடைக்க 3 வார காலம் ஆகிறது. முடிவுகள் அடிப்படையில்தான் நோயாளிகளுக்கு மருந்துகள் பரிந்துரைக்கப்படும். அதுவரை முதல் கட்ட தடுப்பு மருந்துகள் வழங்கப்படும்.

இந்நிலையில், காசநோயின் ரெசிஸ்டென்ஸ் வகையை கண்டறியும் இடைநிலை குறிப்பு ஆய்வகம் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது சோதனை ஓட்டம் தொடங்கியுள்ளது. விரைவில் அனைத்துப் பரிசோதனைகளும் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஆய்வகத்தில் மேற்கொள்ளப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT