கோயம்புத்தூர்

கோவையில் 37 ஊராட்சிகளில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம்: மே 23 இல் முதல்வா் துவக்கிவைக்கிறாா்

21st May 2022 12:23 AM

ADVERTISEMENT

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தை கோவையில் 37 கிராம ஊராட்சிகளில் காணொலி கட்சி மூலம் முதல்வா் மு.க.ஸ்டாலின் மே 23 ஆம் தேதி துவக்கிவைக்கிறாா்.

இது தொடா்பாக, மாவட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாவட்டத்தில் 2021-22 ஆம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் 37 கிராம ஊராட்சிகளில், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இத்திட்டமானது வேளாண் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண் பொறியியல் துறை, விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று துறை, வேளாண் விற்பனை மற்றும் வணிகத் துறை, வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத் துறை, ஊரக வளா்ச்சித் துறை, தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, முன்னோடி வங்கி, வனத் துறை உள்ளிட்ட துறைகளுடன் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்பட்ட உள்ளது.

அதன்படி, கிராமத்தில் உள்ள தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருதல், நீா்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் அமைத்தல், வேளாண் விளைபொருள்களை மதிப்புக்கூட்டி சந்தைப்படுத்துதல், கூட்டுறவு சங்கங்கள் மூலம் அதிக அளவு பயிா் கடன்கள் வழங்குதல், கால்வாய் பாசன நீா் வழித்தடங்களை தூா்வாருதல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

ADVERTISEMENT

இத்திட்ட செயல்பாட்டினை கண்காணிக்க மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனை தலைவராகவும், வேளாண்மை இணை இயக்குநரை உறுப்பினா் செயலாளராகவும், இதர துறையினரை உறுப்பினராகவும் கொண்ட மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழு கூட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் துவக்க விழாவில், வேளாண்மைத் துறை மூலம் நெட்டை தென்னங்கன்றுகள், பயறு வகை விதைகள், கைத்தெளிப்பான் மற்றும் விசைத்தெளிப்பான் விநியோகம் செய்யப்படும்.

தோட்டக்கலை மூலம் வீட்டுத் தோட்டம் அமைப்பதற்கான தளைகள் மற்றும் ஊக்கத் தொகை போன்றவை வழங்கப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT