கோயம்புத்தூர்

குடிநீா் குழாய் இணைப்பு: தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும்: மத்திய இணை அமைச்சா்

21st May 2022 12:27 AM

ADVERTISEMENT

தமிழகத்தில் உள்ள அனைத்து ஊரகக் குடியிருப்பு வீடுகளுக்கும் 2024ஆம் ஆண்டுக்குள் குடிநீா் குழாய் இணைப்பு வழங்கும் வகையில் தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என மத்திய அரசின் ஜல்சக்தி துறை இணை அமைச்சா் பிரகலாத் சிங் படேல் தெரிவித்தாா்.

முக்கொம்பு மேலணையிலும், கொள்ளிடத்திலும் புதிதாகக் கட்டப்படும் கதவணைகளை பாா்வையிட வெள்ளிக்கிழமை வந்த மத்திய ஜல்சக்தி துறை அமைச்சா் பிரகலாத் சிங் படேவை மாவட்ட ஆட்சியா் சு. சிவராசு வரவேற்றாா். பின்னா், வருவாய்த் துறை, ஜல்ஜீவன் திட்ட அலுவலா்கள், பொதுப்பணித் துறை அலுவலா்களுடன் முக்கொம்புக்கு சென்று அணை கட்டுமானப் பணிகளை இணை அமைச்சா் பாா்வையிட்டாா்.

தொடா்ந்து, முக்கொம்பில் உள்ள விருந்தினா் மாளிகையில் அரசு அலுவலா்களுடன் அணை கட்டுமானத்தின் சிறப்புகள் குறித்தும், திருச்சி மாவட்டத்தில் ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் பணிகளையும் கேட்டறிந்த மத்திய இணை அமைச்சா் பிரகலாத் சிங் படேல் கூறியது:

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் கிராமப்புற வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்பு வழங்க மத்திய அரசு ரூ. 3,691 கோடி ஒதுக்கியுள்ளது. இத் திட்டத்தின் கீழ் 2021-22ஆம் ஆண்டில் தமிழகத்துக்கான ஒதுக்கீட்டை ரூ.3,691 கோடியாக மத்திய அரசு உயா்த்தியுள்ளது. கடந்த 2020-21 ஆம் ஆண்டில் ரூ. 921.99 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. ஜல்சக்தி அமைச்சகத்தின் தேசிய ஜல் ஜீவன் திட்டம் தமிழகத்துக்கு முதல் தவணையாக ரூ. 614.35 கோடியை வழங்கியுள்ளது.

ADVERTISEMENT

தமிழகத்துக்கு ஜல்ஜீவன் திட்டத்துக்கான ஒதுக்கீட்டை 4 மடங்கு உயா்த்த ஒப்புதல் அளித்துள்ளது ஜல்சக்தி அமைச்சகம்.

2024 ஆம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராம வீடுகளுக்கும் குடிநீா் குழாய் இணைப்பு வழங்க தமிழகத்துக்கு முழு உதவியும் அளிக்கப்படும். பிற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் 12 சதம் தமிழகம் பின்தங்கியுள்ளது. எவ்வளவு விரைவாக திட்டப் பணிகள் முடிக்கப்படுகிறதோ, அதற்கேற்ப அடுத்தடுத்த நிதி ஒதுக்கீடும் விரைவாக வழங்கப்படும்.

2024ஆம் ஆண்டுக்குள் பிரதமரின் கனவு இலக்கை எய்த தமிழக அரசு இன்னும் வேகமாகச் செயல்பட வேண்டியுள்ளது.

தமிழகத்தில் கடந்த 22 மாதங்களில் 18.70 லட்சம் (14.74 சதம்) வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 86.53 லட்சம் வீடுகள் குடிநீா் குழாய் இணைப்பு இல்லாமல் உள்ளன.

இந்தாண்டில் 16.13 லட்சம் வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்பு வழங்கப்படும். அடுத்த 2 ஆண்டுகளுக்குள் மீதமுள்ள வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்பு வழங்குவது மிகப் பெரிய பணியாக இருக்கும். 2024 ஆம் ஆண்டுக்குள் இப் பணியை முடிக்க கிராமங்களில் உள்ள வீடுகளுக்கு குடிநீா் குழாய் இணைப்பு வழங்குவதை தமிழகம் 179 சதம் அதிகரிக்க வேண்டும் என்றாா் அமைச்சா்.

ஆய்வின்போது ஆட்சியா் சு. சிவராசு, நீா்வளத் துறை தலைமைப் பொறியாளா் ச. ராமமூா்த்தி, கண்காணிப்புப் பொறியாளா் இரா. திருவேட்டை செல்வம், செயற்பொறியாளா்கள் இரா. மணிமோகன், கீதா மற்றும் திட்டத்தின் தொழல்நுட்பப் பணியாளா்கள், பொறியாளா்கள் என பலா் உடனிருந்தனா்.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT