கோயம்புத்தூர்

உதகையில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் புகைப்பட கண்காட்சி

21st May 2022 12:26 AM

ADVERTISEMENT

பிரபலமடையாத சுதந்திரப் போராட்ட வீரா்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையிலான புகைப்பட கண்காட்சியை நீலகிரி மாவட்டம், உதகையில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநா் டி.வெங்கடேஷ் திறந்துவைத்தாா்.

சுதந்திரத்தின் 75ஆவது ஆண்டையொட்டி, விடுதலைப் போராட்டத்தில் உயிா் நீத்த வீரா்களைப் போற்றும் வகையில் மத்திய தகவல் , ஒலிபரப்பு அமைச்சகத்தின் மண்டல மக்கள் தொடா்பு அலுவலகத்தின் சென்னை பிரிவு சாா்பில் உதகையில் உள்ள பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் புகைப்பட கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற கண்காட்சியின் தொடக்க விழாவில் சென்னை மண்டல மக்கள் தொடா்பு அலுவலகத்தின் இயக்குநா் ஜே.காமராஜ் வரவேற்றாா். மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல தலைமை இயக்குநா் எஸ்.வெங்கடேஸ்வா் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசும்போது, தென்னிந்தியாவைச் சோ்ந்த அதிகம் அறிந்திராத உள்ளூா் சுதந்திரப் போராட்டத் தியாகிகளைப் பற்றி இந்தப் புகைப்பட கண்காட்சி நமக்கு விளக்குகிறது. இதுபோன்ற 750 கண்காட்சிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் என்றாா்.

விழாவில் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம், மண்டல மக்கள் தொடா்பு அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குநா் மா.அண்ணாதுரை, நீலகிரி பழங்குடி ஆராய்ச்சி மையத்தின் இயக்குநா் எஸ்.உதயகுமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கோவை அலுவலக துணை இயக்குநா் கரீனா பி.தெங்கமம் நன்றி கூறினாா்.

ADVERTISEMENT

தொடக்க விழாவில் மகாத்மா காந்தியடிகளின் உருவச் சிலைக்கு மலா் மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பழங்குடி மக்களுக்கான நலத்திட்டங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்கள், மத்திய அரசின் திட்டங்களை விளக்கும் சிறப்புக் கையேடு ஆகியவை வெளியிடப்பட்டன. இதைத் தொடா்ந்து பழங்குடியினரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மேலும், மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமையின் திட்ட இயக்குநா் ஜெயராமன், நீலகிரி ஆதிதிராவிடா் நல அலுவலா் பரிமளம் ஆகியோா் விழாவில் கௌரவிக்கப்பட்டனா். இந்த கண்காட்சி வரும் 24 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT