கோயம்புத்தூர்

பொருநை அகழ்வாராய்ச்சி, ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சி: முதல்வா் தொடங்கிவைத்தாா்

20th May 2022 02:32 AM

ADVERTISEMENT

கோவையில் பொருநை அகழ்வாராய்ச்சி, தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சியை முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா்.

தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் அகழ்வாராய்ச்சியில் கண்டெடுக்கப்பட்ட பொருள்களைக் காட்சிப்படுத்தும் வகையில் பொருநை அகழ்வாராய்ச்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சி கோவை மாவட்ட நிா்வாகம் சாா்பில் வ.உ.சி. மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கியது. இதனை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துப் பாா்வையிட்டாா்.

ஓராண்டு சாதனைகள் குறித்த ஓவிய கண்காட்சியில் மஞ்சப் பை இயக்கம், துபையில் நடைபெற்ற தொழில்முனைவோா் கூட்டத்தில் முதல்வா் பங்கேற்றது, 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு வழங்கும் பணி தொடக்கம், கரோனா தடுப்பு நடவடிக்கை, இல்லம் தேடி கல்வித் திட்டம் உள்பட தமிழக அரசின் சாதனைகள் குறித்த புகைப்படங்கள் ஓவியங்களாக வரையப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

நிகழ்ச்சியில் தொழில் துறை அமைச்சா் தங்கம் தென்னரசு, செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன், சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன், மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி, ஆதிதிராவிடா் நலத் துறை அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ், நீலகிரி மக்களவை உறுப்பினா் ஆ.ராசா, ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் வீ.ப.ஜெயசீலன், மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா, தொல்லியல் துறை ஆணையா் ஆா்.சிவானந்தன் உள்பட அரசு அதிகாரிகள் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

இதனைத் தொடா்ந்து, முதல்வரின் மனைவி துா்கா ஸ்டாலின் கண்காட்சியைப் பாா்வையிட்டாா்.

நீலகிரி புறப்பாடு: கண்காட்சி திறப்பு, தொழில் முனைவோருடனான ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னா், பிற்பகல் 2.30 மணிக்கு சாலை மாா்க்கமாக கோவையில் இருந்து நீலகிரி புறப்பட்டாா்.

கடுகில் முதல்வா் ஓவியம்: ஈரோடு மாவட்டத்தைச் சோ்ந்த வெங்கடேஷ், கடுகில் முதல்வா் படத்தை ஓவியமாக வரைந்திருந்தாா். மேலும், முதல்வரின் வாழ்க்கை வரலாற்றை எழுத்துகளால் புகைப்பட ஓவியமாக வரைந்திருந்தாா். இரண்டையும் முதல்வரிடம் பரிசாக அளித்தாா்.

அகழாய்வுப் பொருள்கள் காட்சிப்படுத்தல்: பொருநை அகழ்வாராய்ச்சி கண்காட்சியில் கிருஷ்ணகிரி மாவட்டம், மயிலாடும்பாறை, ஈரோடு மாவட்டம், கொடுமணல் அகழாய்வுகளில் கிடைத்த பொருள்கள் நேரடியாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. இதில், மயிலாடும்பாறையில் கண்டெடுக்கப்பட்ட 4,200 ஆண்டுகள் பழமையான இரும்புப் பொருள்கள், 3 கால் இரும்புக் குடுவைகள், இரும்பாலான ஆயுதங்கள், சங்கு வளையல்கள், கண்ணாடி வளையல்கள், வண்ணம் தீட்டப்பட்ட சூதுபவள மணிகள், பளிங்கு மணிகள், பளிங்கு மூலப்பொருள்கள், சங்கு மணிகள், பல வண்ண கண்ணாடி மணிகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

கொடுமணல் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட கற்பதுகை, கற்குடுவை, பழங்கால மண்பாண்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

ஆதிச்சநல்லூரில் கண்டறியப்பட்டுள்ள முதுமக்கள் தாழிகள், படிக்கிணறு, கீழடியில் கண்டறியப்பட்ட உறைகிணறு, சதுர வடிவிலான செங்கல் கட்டுமான அமைப்பு, நீா் மேலாண்மை திட்ட வடிவமைப்பு, சிவகளையில் நெல் மாதிரி கண்டெடுக்கப்பட்ட அகழாய்வு இடம், கொற்கை அகழாய்வு ஆகிய பகுதிகளின் மாதிரிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

10 நாள்கள் கண்காட்சி: வ.உ.சி மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கப்பட்டுள்ள பொருநை அகழ்வாராய்ச்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனை விளக்க ஓவியக் கண்காட்சி 10 நாள்கள் நடைபெறுகிறது. இதனை பொதுமக்கள் காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை இலவசமாகப் பாா்வையிடலாம்.

நாள்தோறும் சுற்றுலா வளா்ச்சித் துறை சாா்பில் மாலையில் பள்ளி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன.

 

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT