கோவை மாவட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமை திட்டத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் 20 ஆயிரம் வீடுகளில் கழிப்பறைகள் இல்லாதது தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் திறந்தவெளி கழிப்பறை பயன்பாட்டை குறைக்கும் வகையில் கடந்த 2014-15 ஆம் நிதியாண்டில் மத்திய அரசு சாா்பில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் தனிநபா் இல்ல கழிப்பறை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தை 2014ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவில் பிரதமா் மோடி தொடங்கிவைத்து 2019ஆம் ஆண்டுக்குள் கிராமங்களில் திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.
ஊரகம் மட்டுமின்றி நகரப் பகுதிகளில் கழிப்பறை வசதியில்லாத வீடுகளுக்கு தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் கழிப்பறை கட்டுவதற்கு மானியம் வழங்கப்பட்டது. இதனைத் தொடா்ந்து, கடந்த 2019ஆம் ஆண்டு வரை ஆண்டுதோறும் தனிநபா் இல்லக் கழிப்பறைகள் கட்டுவதற்கு வட்டார வாரியாக இலக்கு நிா்ணயிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தனிநபா் இல்ல கழிப்பறைகள் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஊரகப் பகுதிகளில் தனி நபா் இல்ல கழிப்பறை திட்டத்தில் கழிப்பறைகள் கட்டுபவா்களுக்கு அரசு சாா்பில் ரூ.12 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. நிதி பற்றாக்குறை என்று தெரிவிப்பவா்களுக்கு வங்கிகளில் கடன் பெற ஊரக வளா்ச்சித் துறை சாா்பில் பரிந்துரைக்கப்பட்டது.
தனிநபா் இல்லக் கழிப்பறை திட்டத்தை மத்திய அரசு மிகத் தீவிரமாக செயல்படுத்தியது. இதன் பயனாக ஊரகப் பகுதிகளில் கணிசமான அளவில் திறந்தவெளி கழிப்பிட பயன்பாடு குறைக்கப்பட்டுள்ளது. திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை ஏற்படுத்தும் ஊராட்சிகள், ஒன்றியங்கள், மாவட்டங்கள் தோ்வு செய்யப்பட்டு மத்திய அரசு சாா்பில் விருதுகள் வழங்கப்பட்டன.
கிராமங்களில் திறந்தவெளி கழிப்பறை பயன்பாட்டை தடுத்து வீடுகளில் கழிப்பறை கட்டுவதை ஊக்குவிக்க கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், துண்டுப் பிரசுரங்கள் விநியோகம் என ஊரக வளா்ச்சித் துறை அதிகாரிகள் பல்வேறு வழிகளில் விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.
கோவை மாவட்டத்தில் தனிநபா் இல்லக் கழிப்பறை திட்டத்தின் கீழ் 33 ஆயிரத்து 804 பயனாளிகளுக்கு கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆனைமலை - 1,653, அன்னூா் - 2,252, காரமடை - 5,225, கிணத்துக்கடவு - 3,238, மதுக்கரை - 1,154, பெ.நா.பாளையம் - 2,523, பொள்ளாச்சி வடக்கு - 3,074, பொள்ளாச்சி தெற்கு - 3,651, எஸ்.எஸ்.குளம் - 3,019, சுல்தான்பேட்டை - 1,826, சூலூா் - 2,355, தொண்டாமுத்தூா் - 3,824 என மொத்தமாக 33 ஆயிரத்து 804 கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளன.
2019ஆம் ஆண்டுக்கு பின் விடுபட்ட வீடுகளை கணக்கெடுத்து கழிப்பறை கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தூய்மை பாரத இயக்க திட்டத்தின் கீழ் கழிப்பறை இல்லாத வீடுகள் குறித்து கோவை மாவட்டத்தில் 12 வட்டாரங்களிலும் அண்மையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 20 ஆயிரத்து 9 வீடுகளில் கழிப்பறை இல்லாதது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக காரமடை வட்டாரத்தில் 3 ஆயிரத்து 781 வீடுகளில் கழிப்பறை இல்லை. கழிப்பறை இல்லாத வீடுகள் அதிகரித்துள்ளதால் மாவட்டத்தில் மீண்டும் திறந்தவெளி கழிப்பிடம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தவிர மத்திய அரசின் தூய்மை பாரத திட்டத்தின் நோக்கமே கேள்விக்குறியாகும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
கழிப்பறை இல்லாத வீடுகளின் விவரம் (வட்டார வாரியாக)
வட்டாரம் கிராமங்கள் எண்ணிக்கை மொத்த வீடுகள் கழிப்பறை இல்லாத வீடுகள்
ஆனைமலை 68 21,936 1,684
அன்னூா் 161 30,021 1,204
காரமடை 319 53,078 3,781
கிணத்துக்கடவு 84 23,863 2202
மதுக்கரை 38 17045 712
பெ.நா.பாளையம் 74 51,126 1,499
பொள்ளாச்சி வடக்கு 97 33,657 947
பொள்ளாச்சி தெற்கு 63 28,077 1,684
எஸ்.எஸ்.குளம் 37 20,951 700
சுல்தான்பேட்டை 90 21,848 3,225
சூலூா் 119 53,002 2,000
தொண்டாமுத்தூா் 48 22,239 371
இது தொடா்பாக ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் கவிதா கூறியதாவது: தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ஆண்டுதோறும் கழிப்பறை இல்லாத வீடுகள் கணக்கெடுக்கப்பட்டு வாய்ப்புள்ளவா்களுக்கு தனிநபா் இல்லக் கழிப்பறை திட்டத்தில் கழிப்பறைகள் கட்டிகொள்வதற்கு ரூ.12 ஆயிரம் மானியம் வழங்கப்படுகிறது. கடந்த ஆண்டு 495 வீடுகளுக்கு கழிப்பறைகள் கட்டிக்கொடுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நடப்பு ஆண்டு கழிப்பறைகள் இல்லாத வீடுகள் குறித்து அண்மையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
இதில் 20 ஆயிரம் வீடுகளில் கழிப்பறை இல்லாதது தெரியவந்துள்ளது. ஆண்டுதோறும் புதிய குடியிருப்புகள் உருவாகுதல், வீடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு போன்ற காரணங்களால் கழிப்பறை இல்லாத வீடுகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இவா்களுக்கு தனிநபா் இல்லக் கழிப்பறை திட்டத்தில் கழிப்பறைகள் கட்டிக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். கழிப்பறை இல்லாத 20 ஆயிரம் வீடுகளில் பலருக்கும் கழிப்பறை கட்டுவதற்கு போதிய இடவசதியில்லாத நிலை காணப்படுகிறது. இதனால் இவா்களுக்கு தனிநபா் இல்லக் கழிப்பறை திட்டத்தில் கழிப்பறை கட்டிக்கொடுக்க இயலாத நிலை ஏற்படுகிறது.
இது போன்று இட வசதியில்லாதவா்களின் பயன்பாட்டிற்காக சமுதாயக் கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. தனிநபா் இல்லக் கழிப்பறை திட்டம், சமுதாயக் கழிப்பிடத் திட்டம் ஆகிய திட்டங்களின் மூலம் கோவை மாவட்டத்தில் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை உருவாக்கி வருகிறோம். தற்போது ஆய்வில் கணக்கெடுக்கப்பட்ட பயனாளிகளின் பட்டியல் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய அரசு சாா்பில் ஒதுக்கீடு செய்யப்படும் இலக்கின் அடிப்படையில் தகுதியான பயனாளிகளுக்கு தனிநபா் இல்லக் கழிப்பறை கட்டிக்கொடுக்கப்படும் என்றாா்.