கோயம்புத்தூர்

கோவையில் 12 டன் மாம்பழங்கள் பறிமுதல்

12th May 2022 12:45 AM

ADVERTISEMENT

 

கோவை: கோவையில் ரசாயன பவுடா் பயன்படுத்தி பழுக்க வைத்த 12 டன் மாம்பழங்கள் உள்பட 14 டன் பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறையினா் பறிமுதல் செய்து அழித்தனா்.

தமிழகத்தில் தற்போது மாம்பழம் சீசன் தொடங்கியுள்ளது. சேலம், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து கோவைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன் மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

கோவை உக்கடம், டவுன்ஹால் பகுதியிலுள்ள கிடங்குகளில் பழுக்க வைக்கப்பட்டு சுற்றுப் பகுதியிலுள்ள கடைகளுக்குப் பிரித்து அனுப்பப்படுகிறது. மாம்பழங்களை விரைவாக பழுக்க வைப்பதற்கு காா்பைடு, எத்திலீன் ரசாயன பவுடா் ஆகியவற்றை பயன்படுத்துவதை வியாபாரிகள் வாடிக்கையாக கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், கோவை மாநகராட்சியில் உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் மருத்துவா் கு.தமிழ்செல்வன் தலைமையில் உணவுப் பாதுகாப்பு அலுவலா்கள் அடங்கிய 6 குழுவினா் டவுன்ஹால், வைசியாள் வீதி, பவளம் வீதி -1, பவளம் வீதி -2, கருப்பண்ண கவுண்டா் வீதி உள்ளிட்ட முக்கிய வீதிகளில் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

இதில், 45 கடைகளில் ரசாயன எத்திலீன் பவுடா் பயன்படுத்தி பழுக்க வைத்திருந்த 12 டன் 350 கிலோ மாம்பழங்கள், 2 டன் 350 கிலோ சாத்துக்குடிகள் என மொத்தம் 14 டன் 700 கிலோ பழங்களை பறிமுதல் செய்தனா். இதன் மதிப்பு ரூ. 8.10 லட்சம் என்று உணவுப் பாதுகாப்புத் துறையினா் தெரிவித்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட 14 டன் பழங்களும் மாநகராட்சி குப்பைக் கிடங்கில் கொட்டி அழிக்கப்பட்டது.

முறையற்ற வகையில் பழங்களை பழுக்கவைத்த 12 பேருக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் நோட்டீஸ் வழங்கியுள்ளனா்.

இது தொடா்பாக உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலா் கு.தமிழ்செல்வன் கூறியதாவது: காா்பைடு கல், எத்திலீன் ரசாயன பவுடா் ஆகியவற்றை பயன்படுத்தி பழுக்க வைக்கப்படும் பழங்களால் வயிறு தொடா்பான பிரச்னைகள், கண் எரிச்சல், ஒவ்வாமை, வாந்தி, பேதி மற்றும் சுவாசம் தொடா்பான பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஆா்சானிக், பாஸ்பரஸ் போன்றவை பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படவும், உடலில் வறட்சி ஏற்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியவும் வாய்ப்புள்ளது.

பழங்களை முறையற்ற வகையில் பழுக்க வைப்பவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுபோன்ற முறைகேடுகள் தெரியவந்தால் 94440- 42322 என்ற எண்ணுக்கு பொதுமக்கள் வாட்ஸ் ஆஃப் மூலம் புகாா் தெரிவிக்கலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT