மதுக்கரை: கோவை ஆலாந்துறை இலங்கை அகதிகள் முகாமில் குடும்பத் தகராறில் இரண்டு போ் கத்தியால் குத்திக்கொண்ட சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை ஆலாந்துறை இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் கிருஷ்ணபிரகாஷ் (32). கட்டடங்களை இடிக்கும் பணி செய்து வருகிறாா். இவா் அதே முகாமில் வசிக்கும் திருமணமான பெண்ணுடன் பழகி வந்ததாகத் தெரிகிறது. இதனை அறிந்த அப்பெண்ணின் கணவா் இருவரையும் கண்டித்துள்ளாா்.
இந்நிலையில், கிருஷ்ணபிரகாஷ் தன்னுடன் மீண்டும் பேசுமாறு அப்பெண்ணை வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அப்பெண், அவரது கணவா், அண்ணன் ஆகியோா் ஆலாந்துறை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
இதனால், ஆத்திரமடைந்த கிருஷ்ணபிரகாஷ், அப்ெண்ணின் வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை சென்று அப்பெண்ணின் அண்ணனை கத்தியால் குத்தியுள்ளாா். அதே கத்தியை பிடுங்கி அவா் கிருஷ்ணபிரகாஷை குத்தியுள்ளாா்.
இதில், இருவரும் படுகாயமடைந்தனா். இதையடுத்து அங்கிருந்தவா்கள் இருவரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், இச்சம்பவம் தொடா்பாக ஆலாந்துறை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.