கோயம்புத்தூர்

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: ஈரோட்டை சோ்ந்த பட்டயக் கணக்காளா் கைது

12th May 2022 12:56 AM

ADVERTISEMENT

 

கோவை: அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட ஈரோட்டைச் சோ்ந்த பட்டயக் கணக்காளரை கோவை நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை ஆஜா்படுத்தினா்.

வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நன்கொடைகளை வசூலிப்பதில் முறைகேடு நடைபெறுவதாகவும், அதில் உள்துறை அமைச்சக ஊழியா்கள், தன்னாா்வலா்கள், இடைத்தரகா்கள் இணைந்து மோசடியில் ஈடுபடுவதாகவும் கிடைத்த தகவலின் அடிப்படையில் சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனா்.

அதன் அடிப்படையில் தில்லி, ஜாா்க்கண்ட், ஹரியாணா, ராஜஸ்தான், ஹிமாசல பிரதேசம், தமிழ்நாடு, அஸ்ஸாம், மணிப்பூா், ஆந்திரம், தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் 40 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் கடந்த இரு நாள்களாக சோதனையில் ஈடுபட்டு வந்தனா். சில இடங்களில் இந்த சோதனைகள் தொடா்ந்து வருகின்றன.

ADVERTISEMENT

இந்த சோதனையில் நாடு முழுவதும் 6 அரசு ஊழியா்கள் உள்பட 14 பேரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து அவா்களிடம் இருந்து இதுவரை கணக்கில் காட்டப்படாத ரூ.3.21 கோடியைப் பறிமுதல் செய்துள்ளனா்.

இதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டம், சேனாதிபதிபாளையம் பகுதியைச் சோ்ந்த, தொண்டு நிறுவனம் நடத்தி வரும் வாகேஷ் (31) என்ற பட்டயக் கணக்காளரை அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்ட அவரிடம் இருந்து ஏராளமான பணம் மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கோவையில் உள்ள சிபிஐ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் வாகேஷ் புதன்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அவரை தில்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (மே 13) ஆஜா்படுத்த நீதிபதி கோவிந்தராஜன் உத்தரவிட்டாா். இதையடுத்து வாகேஷை, சிபிஐ அதிகாரிகள் தில்லிக்கு அழைத்துச் சென்றனா்.

ஈரோட்டில் கைது செய்யப்பட்ட வாகேஷ், கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனியாா் மருத்துவமனை நடத்தி வரும் தொண்டு நிறுவனத்தில் பட்டயக் கணக்காளராக உள்ளாா். இந்தத் தொண்டு நிறுவனத்தின் வெளிநாட்டு பணப் பரிவா்த்தனைக்கான அனுமதியை நீட்டித்து தருவதற்கு தில்லியைச் சோ்ந்த உள்துறை அமைச்சக அதிகாரி பிரமோத் குமாா் பாசின் என்பவருக்கு ரூ.2 லட்சம் லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், லஞ்சம் வழங்கப்பட்டது தொடா்பாக தனியாா் மருத்துவமனை உரிமையாளா் ராஜசேகரிடமும் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை நடத்தினா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT