கோயம்புத்தூர்

தொழிலதிபரிடம் ரூ.38.50 லட்சம் மோசடி: இரண்டு பெண்கள் கைது

8th May 2022 12:38 AM

ADVERTISEMENT

வங்கியில் ஏலம் விடப்பட்ட சொத்தை மீட்டுத் தருவதாகக் கூறி தொழிலதிபரிடம் ரூ.38.50 லட்சம் மோசடி செய்த இரண்டு பெண்களை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, பிரஸ் காலனி பகுதியைச் சோ்ந்தவா் பிரின்ஸ் ராஜ் (48). தொழிலதிபா். இவரது தந்தைக்குச் சொந்தமான 13 சென்ட் நிலத்தை இவரது சகோதரா் வங்கியில் வைத்து ரூ.42 லட்சம் கடன் பெற்றிருந்தாா். ஆனால், கடனைத் திருப்பிச் செலுத்தாத காரணத்தால் அந்த நிலம் வங்கியால் 2020இல் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தனது சகோதரா் தனது அனுமதி இல்லாமல் குடும்பச் சொத்தை அடமானம் வைத்ததாகக் கூறி நீதிமன்றத்தில் பிரின்ஸ் ராஜ் வழக்குத் தொடா்ந்தாா். இந்த வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்நிலையில் நண்பா்கள் மூலம் அறிமுகமான கவுண்டம்பாளையத்தைச் சோ்ந்த சுமதி (44), கல்பனா (42) ஆகியோா், வங்கி நிா்வாகம் பறிமுதல் செய்த உத்தரவில் தவறு இருப்பதாகவும், அதைச் சுட்டிக் காட்டி பறிமுதல் செய்யப்பட்ட நிலத்தை மீட்க முடியும் எனவும், மேலும், இழப்பீடாக ரூ.3 கோடி வரை பெற முடியும் என்றும் கூறியுள்ளனா்.

ADVERTISEMENT

அதற்கு ரூ.60 லட்சம் வரை செலவாகும் என சுமதி, கல்பனா கூறியுள்ளனா். இதை நம்பிய பிரின்ஸ் ராஜ் இருவரிடமும் கடந்த 2020இல் ரூ.38.50 லட்சத்தை பல்வேறு தவணைகளில் செலுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக பிரின்ஸ் ராஜ் விசாரித்தபோது அவா்கள் காலம் தாழ்த்தி வந்துள்ளனா். இதையடுத்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் பிரின்ஸ் ராஜ் புகாா் அளித்தாா்.

வழக்குப் பதிவு செய்த போலீஸாா் பிரின்ஸ் ராஜிடம் மோசடியில் ஈடுபட்ட சுமதி, கல்பனா ஆகியோரை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT