குடும்பத் தகராறில் மனைவியைக் கொலை செய்த நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியைச் சோ்ந்தவா் கணேசன் (55). இவா், கோவை, சிங்காநல்லூா் பகுதியில் உள்ள பேக்கரி ஒன்றில் சப்ளையராகப் பணியாற்றி வந்தாா். இவரது மனைவி பொன்னுதாய் (46). இருவரும் கோவை வரதராஜபுரத்தில் வசித்து வந்தனா். இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கமாம்.
இந்நிலையில் கணேசன், பொன்னுதாய்க்கு இடையே திங்கள்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கணேசன், வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து பொன்னுதாயை சரமாரியாகத் தாக்கினாா். இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதையடுத்து கணேசன் அங்கிருந்து தப்பிச் சென்றாா். இது தொடா்பாக இவா்களது மகன் மதன்குமாா் அளித்தப் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த சிங்காநல்லூா் போலீஸாா், தலைமறைவாக உள்ள கணேசனைத் தேடி வருகின்றனா்.