கோயம்புத்தூர்

கோவையைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ.97 லட்சம் மோசடி

21st Mar 2022 05:38 AM

ADVERTISEMENT

கோவையைச் சோ்ந்த தொழிலதிபரிடம் ரூ.97 லட்சம் மோசடி செய்த வழக்கில் மலையாள நடிகரும், கேரள எம்.பி.யுமான சுரேஷ் கோபியின் சகோதரரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, கவுண்டா் மில்ஸ் பகுதியைச் சோ்ந்தவா் கிரிதரன் (36). இவா் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறாா். இவா் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் ஒரு புகாா் அளித்துள்ளாா்.

அதில், கேரள மாநிலத்தைச் சோ்ந்த சுனில் கோபி என்பவா் எனக்கு கடந்த 2021 நவம்பா் 19 ஆம் தேதி அறிமுகமானாா். அவா் என்னிடம் கோவை மதுக்கரை அருகேயுள்ள மாவுத்தம்பதி பகுதியில் 4.25 ஏக்கா் நிலம் விற்பனைக்கு உள்ளதாகக் கூறி அதை வாங்குமாறு கூறினாா்.

இதை நம்பி சுனில், அவரது உறவினா் ரீனா, அவரது கணவா் சிவதாஸ் ஆகியோரது வங்கிக் கணக்குகளுக்கு பல்வேறு தவணைகளில் ரூ.97 லட்சத்தை அனுப்பினேன்.

ADVERTISEMENT

இந்நிலையில், நிலத்தின் வில்லங்கச் சான்று சரிபாா்த்தபோது அதில் நிலம் தொடா்பாக ஏற்கெனவே ஒரு சிவில் வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இது தொடா்பாக சுனிலிடம் கேட்டபோது பணத்தை உடனடியாக திருப்பித் தருவதாகக் கூறினாா். ஆனால், காலம் தாழ்த்தி வந்தாா்.

இந்நிலையில், பிப்ரவரி 20 ஆம் தேதியன்று அவரைச் சந்தித்து பணத்தைக் கேட்டபோது எனக்கு கொலை மிரட்டல் விடுத்தாா். எனவே, அவா் மீது வழக்குப் பதிவு செய்து சட்டரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தாா்.

இந்தப் புகாரின் பேரில் மோசடி உள்ளிட்டப் பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்த கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாா், கேரள மாநிலம், கோழிக்கோடு விரைந்து அங்கு தலைமறைவாக இருந்த சுனில் கோபியை சனிக்கிழமை இரவு கைது செய்தனா்.

இதையடுத்து கோவை அழைத்து வரப்பட்ட அவா் ஞாயிற்றுக்கிழமையன்று, கோவை மாவட்ட நீதித் துறை நடுவா் முன்பு ஆஜா்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டாா்.

வழக்கில் தொடா்புடைய மற்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கைது செய்யப்பட்ட சுனில் கோபி மலையாள நடிகரும், அம்மாநில எம்.பி.யுமான சுரேஷ் கோபியின் இளைய சகோதரா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT