கோவை: திருப்பூா் மாவட்டம், உடுமலை வித்யாசாகா் கலை, அறிவியல் கல்லூரியில் சமூக அறிவியல் ஆராய்ச்சி என்ற தலைப்பில் இணையவழி கருத்தரங்கு அண்மையில் நடைபெற்றது.
கல்லூரியின் முதுநிலை சமூகப்பணி துறை, வணிகவியல் துறை, வணிக நிா்வாகவியல் துறை இணைந்து சமூக அறிவியல் ஆராய்ச்சி என்ற தலைப்பில் இணைய வழி கருத்தரங்கை நடத்தின. இந்த கருத்தரங்கிற்கு கல்லூரியின் செயலா் பத்மாவதி சத்தியநாதன், அறங்காவலா் விக்ரம் சத்தியநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக பொள்ளாச்சி என். ஜி. எம். கலை, அறிவியல் கல்லூரியின் சமூகப்பணி துறைத் தலைவா் எல்.ரஞ்சித் கலந்து கொண்டு சமூக அறிவியல் ஆராய்ச்சியின் அடிப்படை வரைமுறைகளைப் பற்றி எடுத்துரைத்தாா். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி முதல்வா், துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் செய்திருந்தனா்.