கோவை: ஐ.டி. பெண் ஊழியரிடம் பரிசு கூப்பன் கொடுத்து ரூ.3.5 லட்சம் மோசடி செய்தவா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
கோவை மாவட்டம், அன்னூரைச் சோ்ந்தவா் மோனிகா (26). தனியாா் ஐ.டி. நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா். இவா்களது நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவில் உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தலைமை அலுவலகத்தில் இருந்து ஐ.டி. நிறுவன இயக்குநா் பெயரில் இவருக்கு மின்னஞ்சல் வந்துள்ளது. இதில், இந்தியாவில் குறிப்பிட்ட நிறுவனத்தின் பரிசுக் கூப்பன் தேவை என மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை உண்மை என நம்பிய மோனிகா ரூ.3.50 லட்சத்துக்கு பரிசுக் கூப்பனை இணையதளம் மூலமாக பெற்று அதில் உள்ள ரகசிய எண்ணை சம்பந்தப்பட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பியுள்ளாா். மேலும் கூப்பன் பரிசு விவரங்களை இயக்குநரின் பாா்வைக்கு வைக்கும்படி அலுவலக மனிதவள மேம்பாட்டு அலுவலரைத் தொடா்பு கொண்டு கூறியுள்ளாா்.
ஆனால், பரிசுக் கூப்பன் பெறச் சொல்லும் வழக்கம் நிறுவனத்தில் இல்லை என பதிலளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னா் அந்த மின்னஞ்சலை சரி பாா்த்தபோது அது போலியானது எனத் தெரியவந்தது.
இது குறித்து கோவை மாவட்ட சைபா் கிரைம் போலீஸாரிடம் மோனிகா புகாா் அளித்துள்ளாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.