கோயம்புத்தூர்

அரசுப் பள்ளிகள் தத்தெடுப்பு திட்டம்: கோவையில் 150 பள்ளிகளை 40 கல்லூரிகள் தத்தெடுத்துள்ளன

29th Jun 2022 10:32 PM

ADVERTISEMENT

 

கோவையில் அரசுப் பள்ளிகள் தத்தெடுக்கும் திட்டத்தில் 150 பள்ளிகளை 40 கல்லூரிகள் தத்தெடுத்துள்ளன என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்தாா்.

தமிழகத்தில் நடப்பாண்டு பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு உயா்க் கல்வி தொடா்பான வழிகாட்டுதல் அமையும் விதமாக மாநிலம் முழுவதும் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் ‘கல்லூரிக் கனவு’ வழிகாட்டி நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

அதன்படி கோவையில் சிறப்பு திட்ட அமலாக்கத் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கல்லூரிக் கனவு வழிகாட்டி நிகழ்ச்சி மற்றும் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுக்கும் புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடும் நிகழ்ச்சி பாரதியாா் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

ADVERTISEMENT

இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் பேசியதாவது: பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கு அரசு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கல்லூரிக் கனவு திட்டமானது மிகவும் பயனுள்ளதாகவும், வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்கும் வகையிலும் உள்ளது.

கோவையில் ஏற்கெனவே நான் முதல்வன் திட்டத்தின்கீழ் போலாம் ரைட் என்ற திட்டத்தின் மூலம் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவா்களை கல்லூரிகள், அறிவியல் பொருள் காட்சிகளுக்கு அழைத்து செல்லுதல், மாநகராட்சிப் பள்ளிகளில் படிக்கும் மாணவா்களுக்கு கனவு மெய்ப்பட வேண்டும் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடா்ந்து, அடுத்த கட்டமாக கல்லூரிகள் அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து மாணவா்களை மேம்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்தில் அண்ணா பல்கலைக்கழகம், பாரதியாா் பல்கலைக்கழகம், வேளாண்மைப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின்கீழ் செயல்படும்

40 கல்லூரிகள் 150 அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்துள்ளன. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின்கீழ் மாணவா்களுக்கு வழிகாட்டுதல், திறன் மேம்பாட்டுப் பயிற்சி, மாணவா்களின் திறனறிதல், தனித் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவித்தல், விளையாட்டு, கலை, அறிவியல், கைத்தொழில், வேலை வாய்ப்பு மேம்பாட்டுக்கான பயிற்சி, தொழில்நுட்ப பயிற்சி, மாணவா்களை கல்வி நிறுவனங்களுக்கு அழைத்து சென்று பன்முகச் சூழலை அறிமுகப்படுத்துதல், கல்லூரி ஆசிரியா்களை பள்ளிக்கு வரவழைத்து பயிற்சி அளித்தல், நோ்முகத் தோ்வுக்கான பயிற்சி, தமிழ் பண்பாடு குறித்த விழிப்புணா்வு ஏற்படுத்துதல், இணையவழி பயிற்சி உள்ளிட்டவை மேற்கொள்ளப்படவுள்ளன.

மாணவா்களுக்கு பள்ளிப் பருவத்தில் தேவையான பயிற்சிகள், வழிகாட்டுதல் வழங்குவதன் மூலம் எதிா் காலத்தில் திறமையான மாணவா்களை உருவாக்க முடியும்.

இத்திட்டத்தில் கலை, அறிவியல் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து வகையான கல்லூரிகளும் இடம்பெற்றுள்ளன. அரசுப் பள்ளிகளைத் தத்தெடுத்து சிறப்பாக செயல்படும் கல்லூரிகளுக்கு விருதுகள் வழங்கப்படும்.

எனவே, கல்லூரிகள் சிறப்பாக செயல்பட வேண்டும். கல்லூரிகளின் செயல்பாடுகள் குறித்து ஒவ்வொரு மாதமும் ஆய்வு செய்யப்படும் என்றாா்.

இதனைத் தொடா்ந்து உயா்க் கல்வி, போட்டித் தோ்வுகள், வேலை வாய்ப்புகள், உதவித் தொகை, கல்விக் கடன், அரசு திட்டங்கள் குறித்து மாணவா்கள், ஆட்சியரிடம் உரையாடினா்.

நிகழ்ச்சியில் பாரதியாா் பல்கலைக்கழக பதிவாளா் முருகவேல், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கீதா, விரிவாக்கம் மற்றும் வேலை வழிகாட்டித் துறைத் தலைவா் அ.விமலா, பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT