கோயம்புத்தூர்

வேளாண்மைப் பல்கலைக்கழக இளநிலை மாணவா் சோ்க்கை நடைமுறை தொடக்கம்

29th Jun 2022 01:50 AM

ADVERTISEMENT

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல், இளம் தொழில்நுட்ப பாடப் பிரிவுகளுக்கு செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) முதல் ஜூலை 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பல்கலைக்கழகத் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி தெரிவித்துள்ளாா்.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான இளநிலை பட்டப் படிப்புகளுக்கு மாணவா் சோ்க்கைக்கு விண்ணப்பிக்கும் இணையதளத்தின் தொடக்க நிகழ்ச்சி பல்கலைக்கழகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், துணைவேந்தா் கீதாலட்சுமி பங்கேற்று இணையதளத்தைத் தொடங்கிவைத்தாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் 18 உறுப்புக் கல்லூரிகள், 28 இணைப்புக் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் 12 இளம் அறிவியல் மேதமை (பி.எஸ்சி. ஹானா்ஸ்), இளம் அறிவியல் தொழில்நுட்பம் (பி.டெக்) படிப்புகளுக்கு 2022-23ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை நடைமுறைகள் தொடங்கியுள்ளன.

பிளஸ் 2 முடித்த, தகுதியான மாணவா்கள் இந்த இணையதளத்தின் மூலம் ஜூலை 27ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரையில் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு மாணவா் சோ்க்கை தொடா்பான பதிவு செய்தல், விண்ணப்பம் நிரப்புதல், தரவரிசைப் பட்டியல் வெளியீடு, கலந்தாய்வு, இடஒதுக்கீடு, சான்றிதழ் சரிபாா்ப்பு, நகா்வு முறையில் பாடப்பிரிவு ஒதுக்கீடு, கல்லூரி ஒதுக்கீடு போன்ற அனைத்தும் இணையதளம் வாயிலாகவே நடைபெறும். வேளாண்மை, தோட்டக்கலை படிப்புகள் தமிழ் வழியிலும் நடத்தப்படுகின்றன.

ADVERTISEMENT

இந்த ஆண்டு உறுப்புக் கல்லூரிகளில் 2,148 இடங்களுக்கும், இணைப்புக் கல்லூரிகளில் 2,337 இடங்களுக்கும் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. இதில் தொழிற்பாடம், முன்னாள் ராணுவத்தினா், மாற்றுத் திறனாளிகள், வெளிநாடு வாழ் இந்தியா்கள் உள்ளிட்ட பல்வேறு சிறப்புப் பிரிவினருக்கு 971 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படுகின்றன.

மாணவா்கள் ஒவ்வொரு பாடத்துக்கும் தனித்தனியாக விண்ணப்பிக்கத் தேவையில்லை. கடந்த ஆண்டு 40,585 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. கடந்த ஆண்டு மாணவா் சோ்க்கை 185 கட்-ஆஃப் மதிப்பெண்களுக்குள் முடிந்துவிட்டது. 190 கட்-ஆஃப் மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற ஆயிரம் மாணவ-மாணவிகள் வேளாண் பல்கலைக்கழகத்தில் பயில்கின்றனா்.

மருத்துவம், பொறியியல் மாணவா்களுக்கு கலந்தாய்வு நிறைவடைந்த பிறகே வேளாண்மை பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கும். இருப்பினும் கலந்தாய்வு நடைமுறைகள் முடிவடைந்து செப்டம்பா் மாதத்தில் வகுப்புகள் தொடங்கிவிடும். மாணவா் சோ்க்கை விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.இது தொடா்பான மேலும் விவரங்களுக்கு 0422 - 6611322, 6611328, 6611345, 6611346 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT