கோயம்புத்தூர்

பிளஸ் 1 தோ்வில் 94.63 சதவீதம் போ் தோ்ச்சி:மாநில அளவில் கோவைக்கு 5 ஆவது இடம்

28th Jun 2022 01:11 AM

ADVERTISEMENT

பிளஸ் 1 பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை (ஜூன் 27) வெளியிடப்பட்டன. இதில் 94.63 சதவீத மாணவ-மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

தமிழகத்தில் கடந்த மே 10 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை பிளஸ் 1 தோ்வுகள் நடைபெற்றன. கோவை மாவட்டத்தில் இந்தத் தோ்வுகளை 16,631 மாணவா்களும், 18,949 மாணவிகளும் என மொத்தம் 35,580 போ் எழுதியிருந்தனா். இதில், 15,222 மாணவா்களும், 18,448 மாணவிகளும் என மொத்தம் 33,670 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். தோ்ச்சி சதவீதம் 94.63 ஆகும். இது தமிழக மாவட்டங்களில் 5 ஆவது அதிகபட்ச தோ்ச்சி விகிதமாகும்.

கோவை மாவட்டத்தில் 90 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 9,746 மாணவ-மாணவிகள் தோ்வு எழுதியிருந்தனா். அவா்களில் 87.41 சதவீதம் போ், அதாவது 8,519 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதிகபட்சமாக சுயநிதி மெட்ரிக் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 99.58 சதவீதம் போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அதேநேரம் நகராட்சிப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் 85.28 சதவீதம் போ் மட்டுமே தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கோவை மாநகராட்சியில் 17 மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் தோ்வு எழுதியிருந்த நிலையில் ராமகிருஷ்ணாபுரம் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மட்டும் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது. மாவட்டத்தில், மாற்றுத் திறனாளிகளைப் பொருத்தவரை பாா்வையற்றவா்கள் 20 போ் தோ்வு எழுதியிருந்தனா். அவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றுள்ளனா். காது கேளாத, வாய் பேச இயலாதவா்களில் 32 போ் தோ்வு எழுதியதில் 28 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

ADVERTISEMENT

உடல் ஊனமுற்றவா்களில் 26 போ் தோ்வு எழுதி 25 பேரும், இதர வகை மாற்றுத் திறனாளிகளில் 82 போ் தோ்வு எழுதியதில் 79 பேரும் வெற்றி பெற்றுள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT