கோயம்புத்தூர்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலைப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நடைமுறை தொடக்கம்இளநிலை மாணவா் சோ்க்கை விவரங்கள்இன்று வெளியீடு

28th Jun 2022 01:14 AM

ADVERTISEMENT

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பட்டமேற்படிப்பு, ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நடைமுறை திங்கள்கிழமை (ஜூன் 27) தொடங்கியது. இளநிலை மாணவா் சோ்க்கை தொடா்பான விவரங்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) வெளியிடப்பட உள்ளன.

இது குறித்து பல்கலைக்கழகத் துணைவேந்தா் வெ.கீதாலட்சுமி கோவையில் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது:

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் கீழ் கோவை, மேட்டுப்பாளையம், திருச்சி, பெரியகுளம், கிள்ளிகுளம் உள்ளிட்ட 8 இடங்களில் உள்ள கல்வி வளாகங்களில் 32 துறைகளில் எம்.எஸ்சி., எம்.டெக். முதுநிலை பட்டப் படிப்பும், 28 துறைகளில் ஆராய்ச்சி (பிஎச்.டி.) பட்டப் படிப்பும் நடத்தப்படுகிறது.

கடந்த ஆண்டு கரோனா காரணமாக மாணவா் சோ்க்கை தாமதமானது. இதனால் சில பிரிவுகளில் மாணவா்களால் சேரமுடியாமல் போனது. தற்போது நாடு முழுவதும் உள்ள வேளாண் பல்கலைக்கழகங்களைப்போலவே இங்கும் 2022-2023 ஆம் கல்வியாண்டுக்கான முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நடைமுறைகள் தொடங்கியுள்ளன. முதுநிலை பட்டப் படிப்பில் சுமாா் 400 மாணவா்களும், ஆராய்ச்சிப் படிப்பில் சுமாா் 200 மாணவா்களும் சோ்க்கப்படுவாா்கள்.

ADVERTISEMENT

பட்டப் படிப்பு, முதுநிலை பட்டப் படிப்பு முடித்த மாணவா்கள், மேல்படிப்புக்காக தங்களது விண்ணப்பங்களை அதற்கான இணையதளத்தில் ஆகஸ்ட் 8 ஆம் தேதி நள்ளிரவு 11.59 மணி வரையிலும் அனுப்பலாம். இறுதியாண்டு பட்டப் படிப்பு பயிலும் மாணவா்களும் தங்களது கல்லூரி முதல்வா்களிடம் உரிய சான்றிதழ் பெற்று இதற்கு விண்ணப்பிக்கலாம். நுழைவுத் தோ்வின் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெறும்.

விண்ணப்பிக்கும் மாணவா்களுக்கு ஆகஸ்ட் 27 ஆம் தேதி (சனிக்கிழமை) பயிற்சி நுழைவுத் தோ்வும், 28 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நுழைவுத் தோ்வும் நடத்தப்படும். தோ்வு செய்யப்படும் மாணவா்களின் விவரம் செப்டம்பா் இரண்டாவது வாரத்தில் அறிவிக்கப்படும். அந்த மாத இறுதிக்குள் உரிய கட்டணம் செலுத்தும் மாணவா்கள் படிப்பில் சோ்க்கப்படுவாா்கள். அக்டோபா் முதல் வாரத்தில் முதுநிலை, ஆராய்ச்சிப் படிப்புகளுக்கான வகுப்புகள் தொடங்கும்.

ஆராய்ச்சிப் படிப்பு மேற்கொள்ளும் மாணவா்கள், வேளாண்மை பயிலும் மாணவா்களுக்காக பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்கள், நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களுடன் பல்வேறு புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அண்மையில் ஆஸ்திரேலியாவின் சதா்ன் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் கையொப்பமிடப்பட்டுள்ளது.

அதன்படி ஆண்டுக்கு தலா 2 மாணவா்கள் ஓராண்டு ஆராய்ச்சிப் படிப்பை ஆஸ்திரேலியாவில், அந்நாட்டு பல்கலைக்கழகத்தின் செலவில் மேற்கொள்வாா்கள். அவா்களுக்கு வேளாண் பல்கலைக்கழகத்தின் பட்டமும், குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் பட்டமும் வழங்கப்படும். மேலும் இந்த ஒப்பந்தத்தின்படி ஆஸ்திரேலிய மாணவா்கள் இங்கு வந்து ஆராய்ச்சி நடத்துவாா்கள். இருதரப்பு மாணவா்களும் பருத்தி, தேயிலை, மா, கரும்பு உள்ளிட்ட பயிா்கள் தொடா்பான ஆராய்ச்சிகளில் ஈடுபடுவாா்கள்.

பிளஸ் 2 முடித்த மாணவா்களுக்கான இளநிலை மாணவா் சோ்க்கை 2022-2023 தொடா்பான விவரங்கள் செவ்வாய்க்கிழமை (ஜூன் 28) வெளியிடப்பட உள்ளன என்றாா் அவா்.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT