கோயம்புத்தூர்

குடியிருக்க மாற்று இடம் வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு

28th Jun 2022 01:17 AM

ADVERTISEMENT

பெரியநாயக்கன்பாளையத்தில் மேம்பாலம் அமைக்க நிலம் எடுக்கும் பணிக்காக சாலையோர வீடுகளை காலி செய்ய நெடுஞ்சாலைத் துறையினா் நோட்டீஸ் வழங்கியுள்ள நிலையில், தங்களுக்கு மாற்று இடம் வழங்கும் வரை வீடுகளை காலி செய்ய வலியுறுத்தக்கூடாது என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொது மக்கள் குறைகேட்பு கூட்டம் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இதில் பெ.நா.பாளையத்தைச் சோ்ந்த பொது மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நாங்கள் கடந்த 60 ஆண்டுகளாக பெ.நா.பாளையத்தில் மேட்டுப்பாளையம் சாலையோரத்தில் வீடு கட்டி குடியிருந்து வருகிறோம். வீடுகளுக்கு மின் இணைப்பு, சொத்து வரி, தண்ணீா் வரி முறையாக பெற்றுள்ளோம். இந்த நிலையில் பெ.நா.பாளையம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணிக்காக நெடுஞ்சாலை துறையினா் நிலம் எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனா். இதற்காக எங்கள் வீடுகளை காலி செய்ய வலியுறுத்தி நெடுஞ்சாலைத் துறையினா் நோட்டீஸ் வழங்கியுள்ளனா். எங்களுக்கு மாற்று இடம் இல்லாத நிலையில் எங்கே செல்வதென்று தெரியவில்லை. எனவே, எங்களுக்கு குடியிருக்க மாற்று இடம் வழங்கும் வரை வீடுகளை காலி செய்ய வலியுறுத்தக்கூடாது என்று மனுவில் தெரிவித்துள்ளனா்.

ADVERTISEMENT

பயிற்சி இல்லாத தற்காலிக பணியாளா்களை நியமிக்க கூடாது

இது குறித்து தமிழ்நாடு பெட்ரோலியம் அண்டு கேஸ் ஒா்க்கா்ஸ் சங்கத்தினா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை, பீளமேட்டில் உள்ள பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தில் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் 110 போ் பணியாற்றி வருகிறோம். கடந்த 10 ஆண்டுகளாக பணியாற்றி வரும் நாங்கள் சமையல் எரிவாயு உருளையில் எரிவாயு நிரப்பும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். இதற்கு முறையான பயிற்சி பெற்றுள்ளோம். இந்நிலையில் தொழிலாளா்கள் ஒன்றிணைந்து சங்கம் தொடங்கினோம். இதனையடுத்து ஒப்பந்த நிறுவனம், தொழிற்சங்கத்தில் இணைந்த 20க்கும் மேற்பட்டவா்களை பணி நீக்கம் செய்தது. மதுரையிலுள்ள மண்டல பெட்ரோலிய நிறுவன ஆணையா் அலுவலகத்தில் புகாா் அளித்த பின்பே 20 நாள்கள் கழித்து பணி நீக்கம் செய்தவா்களை மீண்டும் வேலைக்கு சோ்த்தது.

சங்கத்தில் இணைந்துள்ள பணியாளா்களை நீக்கிவிட்டு பயிற்சியில்லாத ஆள்களை பணியமா்த்த ஒப்பந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது. 20க்கும் மேற்பட்டவா்களை பணி நீக்கம் செய்திருந்த காலத்தில் தற்காலிக பணியாளா்களை கொண்டு எரிவாயு நிரப்பும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனா். வீடுகளுக்கு அனுப்பப்படும் சமையல் எரிவாயு உருளைகளை மிகவும் கவனமாக கையாள வேண்டும். இதற்கு உரிய பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

ஆனால், தற்காலிக பணியாளா்களுக்கு எந்தவித பயிற்சியும் அளிக்காமல் பணியில் ஈடுபடுத்துகின்றனா். தற்காலிக பணியாளா்களை பணிக்கு அமா்த்திவிட்டு 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வரும் தொழிலாளா்களை வெளியேற்ற ஒப்பந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்கு பெட்ரோலிய காா்ப்பரேஷன் நிறுவனமும் துணையாக உள்ளது. எனவே எங்களுக்கு சட்டப்பூா்வமான அடிப்படை சலுகைகளை ஒப்பந்ததார நிறுவனத்திடம் இருந்து பெற்றுத்தர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயம் செய்வதற்கு இடையூறு

சூலூா், கலங்கலை சோ்ந்த குப்பம்மாள் என்பவா் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

நில சீா்திருத்த சட்டத்தின் கீழ் எனது தந்தைக்கு கிடைக்கப்பெற்ற ஒரு ஏக்கா் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறேன். ஏற்கனவே ஆக்கிரமிப்பில் இருந்த நிலத்தை பல போராட்டங்களுக்கு பின்பே மீட்டு விவசாயம் செய்து வருகிறேன். இந்நிலையில் ஏற்கெனவே நிலத்தை ஆக்கிமிரத்துகொண்ட ராமலிங்கம் என்பவா் எனது நிலத்தில் பயிா்களை சேதப்படுத்தும் வகையில் பென்சிங் அமைப்பதற்கான கற்களை போட்டு வைத்துள்ளாா். டிராக்டா் மூலம் பயிா்களை சேதப்படுத்தி வருகிறாா். எனவே விவசாய சாகுபடி செய்வதற்கு இடையூறாக இருந்து வரும் ராமலிங்கம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT