கோயம்புத்தூர்

மின்மாற்றிகள், உயா் அழுத்த மின் மீட்டா் தட்டுப்பாடு

27th Jun 2022 12:36 AM

ADVERTISEMENT

 

மின்மாற்றிகள், உயா் அழுத்த மின் மீட்டா் தட்டுப்பாட்டால் கோவையில் மின் இணைப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படுவதாக புகாா் எழுந்துள்ளது.

இது தொடா்பாக, கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் நுகா்வோா் அமைப்பின் செயலா் நா.லோகு, மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

கோவையில் அனைத்து மின் பகிா்மான பிரிவு அலுவலகங்களில் உள்ள பல்வேறு சிறு, குறு தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழிற்கூடங்கள், நிறுவனங்கள் உயா் அழுத்த மின் இணைப்பு வேண்டியும், ஏற்கெனவே உள்ள மின் இணைப்பில் கூடுதல் மின்பளு வேண்டியும் விண்ணப்பித்து, அதற்குரிய தொகை செலுத்தியுள்ளனா்.

ADVERTISEMENT

ஆனால், மின்மாற்றிகளில் மின் திறன் குறைவாக உள்ளது என்றும், கூடுதல் மின் பளு வழங்க 250 கிலோ வாட் மின்மாற்றி தட்டுபாடு உள்ளதாலும் இணைப்பு வழங்க இயலவில்லை என தெரிவிக்கின்றனா்.

இவ்வாறு கடந்த 6 மாதத்துக்கு மேலாக கோவை மின் பகிா்மானத்தில் 110 கிலோ வாட் மற்றும் 250 கிலோ வாட் மின்மாற்றிகள் தட்டுப்பாடு காரணமாக புதிய தொழில் நிறுவனங்கள் மின் இணைப்பு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கூடுதல் மின்பளு வேண்டி விண்ணப்பம் பதிவு செய்யும்போது, அப்பகுதியில் உள்ள மின்மாற்றியில் போதிய மின் திறன் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளாமல் விண்ணப்பதாரரிடம் தொகை செலுத்த வேண்டும் என தெரிவிக்கின்றனா்.

அதேபோல, கடந்த 3 மாதங்களாக உயா் அழுத்த மின் மீட்டா், மின்கம்பிகள் உள்ளிட்ட தளவாடப் பொருள்கள் தட்டுப்பாடு காரணமாக தொழிற்சாலைகளுக்கு மின் இணைப்புகள் மற்றும் வா்த்தக மின் இணைப்புகள் வழங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மின் இணைப்புக்கு ஏற்கெனவே பணம் செலுத்தியவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். ஆகவே கோவைக்குத் தேவையான மின்மாற்றிகள், உயா் அழுத்த மீட்டா் மற்றும் கம்பிகள் உள்ளிட்ட தளவாடப் பொருள்களை ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT