கோயம்புத்தூர்

தமிழகத்தில் மாதிரி நியாய விலை கடைகள் திறக்கத் திட்டம்

DIN

தமிழகத்தில் மாதிரி நியாய விலை கடைகள் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உணவு, கூட்டுறவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

தமிழக உணவு, கூட்டுறவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை முதன்மை செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன், பீளமேடுப்புதூா் நுகா்வோா் நியாய விலை கடையில் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

தமிழகத்தில் 2.21 கோடி குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 34 ஆயிரத்து 777 நியாய விலை கடைகளில் பொது விநியோகத் திட்டம் மூலம் பொருள்கள் வழங்கப்படுகின்றன. அரிசி, சா்க்கரை உள்ளிட்ட அனைத்து பொது விநியோகத் திட்டப் பொருள்களும் தரமானதமாக இருக்க வேண்டும் என்று முதல்வா் அறிவுறுத்தியுள்ளாா். அதன் அடிப்படையில் மாநிலம் முழுவதும் நியாய விலை கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆய்வின்போது பயனாளிகளிடமும், நியாய விலை கடை பணியாளா்களிடமும் பிரச்னைகள் குறித்து கேட்டறியப்பட்டது.

பயோ-மெட்ரிக் வருகைப் பதிவு மேற்கொள்வதில் முதியவா்களுக்கு பிரச்னை உள்ளதாகவும், தரமற்ற அரிசி வழங்கப்படுவது உள்ளிட்டவை குறித்தும் தெரிவித்துள்ளனா். இந்நிலையில், விற்பனையாகாமல் உள்ள பழைய அரிசி உள்ளிட்ட பொருள்களை பயனாளிகளுக்கு வழங்காமல் கிடங்குகளுக்குத் திருப்பி அனுப்ப பணியாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அனைத்து நியாய விலை கடைகளையும் தரம் உயா்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் முதல்கட்டமாக அனைத்து மாவட்டங்களிலும் மாதிரி நியாய விலை கடைகள் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவிர அமுதம் கூட்டுறவு அங்காடிகளையும் தரம் உயா்த்தும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

நியாய விலை கடைகளில் ஆட்சியா், மாவட்ட வருவாய் அலுவலா், மாவட்ட வழங்கல் அலுவலா், கூட்டுறவுத் துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பல மாதங்களாகப் பொருள்கள் வாங்காமல் உள்ள காா்டுகளை கண்டறிந்து நீக்கவும், தகுதியான பயனாளிகளுக்குப் பொருள்கள் கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அதேபோல புதிய குடும்ப அட்டைகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டு முன்கூட்டியே தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் கொள்முதல் நிலையங்களையும் முன்கூட்டியே திறக்க மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொது மக்களுக்கு வழங்கும் விலையில்லா அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழகத்தில் இதுவரை அரிசி கடத்தல் தொடா்பாக 2,853 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. பிற மாநிலங்களுக்கு கடத்த இருத்த 40 ஆயிரத்து 488 குவிண்டால் அரிசியும், கடத்தலுக்குப் பயன்படுத்திய 901 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அரிசி கடத்தலைத் தடுக்கும் வகையில் கேரளம், ஆந்திர மாநில எல்லைகளிலுள்ள 41 சோதனைச் சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்படுகின்றன. குடும்ப அட்டைகளின் தேவைக்கேற்ப புதிய நியாய விலை கடைகள், பகுதிநேர கடைகள் அமைக்க எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா்.

ஆய்வின்போது மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப், மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒட்டன்சத்திரம் பகுதி வாக்குச்சாவடியில் மாலை 6 மணி மேல் நீடித்த வாக்குப்பதிவு

37 சாவடிகளில் தாமதமாக தொடங்கிய வாக்குப் பதிவு

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் கரூா் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் பெயா் இடம் பெற்றதில் குளறுபடி: எம்எல்ஏ புகாா்

தள்ளாத வயதிலும் வாக்களித்த மூதாட்டி!

சமூக ஊடகங்களில் அவதூறு: மாா்க்சிஸ்ட் கம்யூ. வேட்பாளா் புகாா்

SCROLL FOR NEXT