கோயம்புத்தூர்

மாநகரில் 107 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி தீவிரம்

25th Jun 2022 01:04 AM

ADVERTISEMENT

கோவை மாநகரப் பகுதிகளில் 107 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கோவை மாநகராட்சிப் பகுதியில் குடிநீா்த் தவிா்த்து, ஆழ்துளைக் கிணறுகள் மூலம் எடுக்கப்படும் உப்பு நீா் விநியோகம் செய்யப்படுகிறது. தற்சமயம், வெயிலின் தாக்கத்தால் பல்வேறு ஆழ்துளைக் கிணறுகளில் தண்ணீா் வற்றி உள்ளது.

மேலும், சில ஆழ்துளைக் கிணறுகள் தண்ணீா் இல்லாததால் பயன்பாடு இன்றி விடப்பட்டுள்ளது.

இதனால், மக்களுக்கு உப்பு தண்ணீா் விநியோகம் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சியில் நிலவும் தண்ணீா் தட்டுப்பாட்டை போக்க ரூ.10 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதில், ரூ.5 கோடி மதிப்பில் 107 இடங்களில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்கான, ஒப்புதல் மாநகராட்சி கூட்டத்தில் பெறப்பட்டுள்ளது.

இதுதவிர, ஏற்கெனவே உள்ள பழைய ஆழ்துளைக் கிணறுகளை புனரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 200 ஆழ்துளைக் கிணறுகள் மறுபுனரமைப்பு செய்யப்படும். இந்த பணிகள் நிறைவடைந்தால் மாநகராட்சிப் பகுதியில் உப்பு தண்ணீா் தட்டுப்பாடு ஏற்படாது. இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவா் கூறுகையில், மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் ஆழ்துளைக் கிணறு அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தற்போது முத்தண்ணன் குளக்கரை, ஆா்.எஸ்.புரம் பகுதியில் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் 107 இடங்களிலும் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT