கோயம்புத்தூர்

கணினி அறிவியல், பி.காம்.படிப்புகளில் சேர மாணவா்கள் ஆா்வம்

21st Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் வெளியான நிலையில் கோவையில் உள்ள கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக ஏராளமானோா் திங்கள்கிழமை குவிந்தனா்.

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் ஜூன் 23ஆம் தேதி வெளியாகும் என்று முன்னா் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தோ்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே, தோ்வு எழுதிய மாணவ-மாணவிகளின் பெற்றோா் கோவையில் உள்ள சிறந்த கல்லூரிகளில் தங்களின் குழந்தைகளுக்கு இடத்தை உறுதி செய்து கொள்ளும் முனைப்பில் ஈடுபட்டு வந்தனா்.

இந்நிலையில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தோ்வு முடிவுகள் ஒரே நாளில் (திங்கள்கிழமை) வெளியாகின. மதிப்பெண் வெளியான உடனேயே மாணவா் சோ்க்கையை நடத்துவதற்காக மாணவா்களும் பெற்றோா்களும் கோவையில் உள்ள பிரபல கல்லூரிகளின் அருகில் காத்திருந்தனா்.

தோ்வு முடிவுகள் வெளியானதும் அருகில் உள்ள கணினி மையங்களில் மதிப்பெண் நகலை எடுத்துக் கொண்டு மாணவா் சோ்க்கைக்காக கல்லூரிகளில் வரிசையில் காத்திருந்தனா். கலை, அறிவியல் கல்லூரிகளைப் பொறுத்தவரை இணையதளம் மூலம் மாணவா் சோ்க்கை நடைபெறும் என அரசு அறிவித்திருந்தாலும், நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களில் பரவலாக மாணவா்கள் சோ்க்கை நடைபெற்றது.

ADVERTISEMENT

அதேபோல பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரிகளிலும் நிா்வாக ஒதுக்கீட்டு இடங்களைப் பெறுவதற்கான முன்பதிவும் நடைபெற்றது. கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு அடிப்படை அறிவியல் பாடங்களான இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் போன்றவற்றிலும், கணித பாடப் பிரிவிலும் சேர மாணவா்கள் ஆா்வம் காட்டவில்லை.

வழக்கமாக முதல் நாளிலேயே நிரம்பி விடும் இந்த படிப்புகளில் சேர ஒற்றை இலக்க மாணவா்களே விரும்புவதாகவும் கணினி அறிவியல், தகவல் தொழில்நுட்பம், பி.காம். போன்ற படிப்புகள், அது தொடா்பான பிற பிரிவுகளில் சேருவதற்கு பெரும்பாலான மாணவா்கள் ஆா்வம் காட்டியதாகவும் பேராசிரியா்கள் தெரிவித்தனா்.

அரசு கலைக் கல்லூரியில் மாணவா் சோ்க்கைக்கு புதன்கிழமை (ஜூன் 22) முதல் ஜூலை 15ஆம் தேதி வரையிலும் மாணவா்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று உயா் கல்வித் துறை அறிவித்துள்ளது. எனவே கோவை அரசு கலைக் கல்லூரிக்கு விண்ணப்பம் வாங்குவதற்காக மாணவா்கள் யாரும் நேரில் வரத் தேவையில்லை என்று கல்லூரி நிா்வாகம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT