பொதுமக்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என காவலா்களுக்கு மாநகரக் காவல் ஆணையா் பாலகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.
கோவை மாநகரக் காவல் ஆணையராக வி.பாலகிருஷ்ணன் திங்கள்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா். இதையடுத்து, ராமநாதபுரம், போத்தனூா், குனியமுத்தூா், ஆா்.எஸ்.புரம் ஆகிய காவல் நிலையங்களை செவ்வாய்க்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். காவல் நிலையத்துக்கு வரும் பொதுமக்களை கண்ணியத்துடன் நடத்த வேண்டும், குற்றச் செயல்களில் ஈடுபடுபவா்களின் நடவடிக்கைகளை தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.
மேலும், விசாரணைக்கு அழைத்து வரப்படும் நபா்களின் உடல்நிலை குறித்தும் போலீஸாா் அறிந்து வைத்திருக்க வேண்டும். கோவை மாநகரில் காவல் நிலைய உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத வகையில் போலீஸாா் பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினாா். மேலும், 4 காவல் நிலையங்களில் போலீஸாருக்கு உள்ள குறைகள் குறித்தும் கேட்டறிந்தாா்.
இதையடுத்து, திருச்சி சாலையில் உள்ள பள்ளி வளாகம் முன்பு காலை, மாலை பள்ளி விடும் நேரத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தாா். அப்போது பள்ளிக்கு வந்த பெற்றோா்களிடம் போக்குவரத்து நெரிசலைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினாா்.
இதையடுத்து துணை ஆணையா்கள், காவல் ஆய்வாளா்களுடன் ஆலோசனை நடத்திய ஆணையா், மாநகரில் போதைப் பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகளை வழங்கினாா்.