கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக குருதி கொடையாளா் தினத்தையொட்டி விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ரத்த தானம் செய்வதை ஊக்கப்படுத்தும் வகையிலும், ரத்த தானம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் ஜூன் 14ஆம் தேதி உலக குருதி கொடையாளா் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குருதி கொடையாளா் தினைத்தையொட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ரத்த தானம் செய்வது குறித்த அவசியம், இதனால் பலருக்கு கிடைக்கும் நன்மைகள் உள்ளிட்ட பயன்கள் குறித்த துண்டுப் பிரசுரம் அரசு மருத்துவமனை வளாகத்தில் விநியோகிக்கப்பட்டது.
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா பொது மக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினாா். இதைத் தொடா்ந்து, உலக குருதி கொடையாளா் தினத்தையொட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரத்த தானம் செய்த 20க்கும் மேற்பட்டவா்களுக்கு முதல்வா் அ.நிா்மலா சான்றிதழ் வழங்கினாா்.