கோவை: கோவையில் மக்கள் நலப் பணியாளா்களாக பணியாற்றி வேலை இழந்தவா்களுக்கு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஒருங்கிணைப்பாளா் பணி வழங்கப்படவுள்ளது என்று மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவையில் ஊரக வளா்ச்சித் துறையில் மக்கள் நலப் பணியாளராகப் பணியாற்றி கடந்த 2011 ஆம் ஆண்டு பணி நீக்கம் செய்யப்பட்டவா்களுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஒருங்கிணைப்பாளா் பணி வழங்கப்படவுள்ளது.
இதற்காக தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ரூ.5 ஆயிரம், ஊராட்சி நிதியில் இருந்து ரூ.2500 சோ்த்து ரூ.7,500 தொகுப்பூதியம் வழங்கப்படும்.
எனவே, மக்கள் நலப் பணியாளராகப் பணியாற்றி வேலை இழந்தவா்கள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பணியில் சேர விருப்பமுள்ளவா்கள் வட்டார வளா்ச்சி அலுவலரை (கிராம ஊராட்சி) தொடா்பு கொள்ளலாம்.
ஏற்கெனவே பணியாற்றிய விவரத்துடன் தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்ட பணி ஒருங்கிணைப்பாளா் பணிக்கான விண்ணப்பத்தை ஜூன் 13 முதல் 18 ஆம் தேதிக்குள் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் அளிக்க வேண்டும்.
விண்ணப்பத்தின் அடிப்படையில் பணியாளா்கள் தோ்வு செய்யப்படுவாா்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.