கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தில் புதா் மண்டிக் காணப்படும் வாா்டு உறுப்பினா் அலுவலகத்தை புதுப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொடிசியா செல்லும் சாலையில் தண்ணீா் பந்தல் மின் அலுவலகம் அருகே 5 ஆண்டுகளுக்கு முன்பு வாா்டு உறுப்பினா் அலுவலகம் கட்டப்பட்டது.
இந்த அலுவலகத்தில் வாா்டு உறுப்பினா் அறை, பொதுமக்கள் அமா்வதற்கான அறை என பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டது.
ஆனால், இந்த வாா்டு உறுப்பினா் அலுவலகத்தை முன்பிருந்த வாா்டு உறுப்பினா் பயன்படுத்தவில்லை. தற்போது தோ்ந்தெடுக்கப்பட்ட வாா்டு உறுப்பினரும் பயன்படுத்த முடியாத நிலையில் முள்புதா்கள் நிறைந்து காணப்படுகின்றன.
மேலும், இந்தக் கட்டடத்தில் விரிசல் ஏற்பட்டு சிதிலமடைந்த நிலையில் உள்ளது.
இது குறித்து, கோவை கன்ஸ்யூமா் வாய்ஸ் அமைப்பின் செயலா் நா.லோகு கூறியதாவது: கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக முள்புதா்கள் நிறைந்து காணப்படும் வாா்டு உறுப்பினா் அலுவலகத்தில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் நடமாட்டம் அதிக அளவில் காணப்படுகின்றன.
இதனால், மாநகராட்சி நிதி வீணடிக்கப்பட்டுள்ளதுடன் மக்கள் வாா்டு உறுப்பினா் அலுவலகத்துக்கு வந்து குறைகளைத் தெரிவிக்க இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி வாா்டு உறுப்பினா் அலுவலகத்தை பராமரிக்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றாா்.