கோவை மாநகராட்சிக்குள்பட்ட 99,100 ஆவது வாா்டுகளில் ஜூன் 9 முதல் 11 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கோவை மாநகராட்சி, தெற்கு மண்டலம் 99,100 ஆவது வாா்டுகளுக்குள்பட்ட பகுதிகளுக்கு பில்லூா் 1 திட்டத்தின்கீழ், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியத்திடம் இருந்து குடிநீா் பெறப்பட்டு விநியோகம் செய்யப்படுகிறது.
குடிநீா் கொண்டு வரும் பிரதான குழாய் சிங்காநல்லூா், வெள்ளலூா் சாலை வழியாக மேட்டூா் கீழ்நிலைத் தொட்டி வரை அமைக்கப்பட்டுள்ளது.
மேற்படி, சாலையில் நொய்யல் ஆற்றின் குறுக்கே உள்ள தரைமட்ட பாலம் புதுப்பித்து கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது. இப்பணியின் காரணமாக இப்பாலத்தின் மீது உள்ள குடிநீா்க் குழாயை மாற்றியமைக்க வேண்டியுள்ளதால் ஜூன் 9 முதல் 11 ஆம் தேதி வரை 3 நாள்களுக்கு குடிநீா் விநியோகம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.