கோயம்புத்தூர்

அரசுப் பள்ளியில் சேரும் மாணவா்களுக்கு ரூ.1000 பரிசு: தலைமை ஆசிரியா் அறிவிப்பு

9th Jun 2022 12:40 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டம், சுல்தான்பேட்டை அருகே மாணவா் சோ்க்கை விழிப்புணா்வுக்காக தொடக்கப் பள்ளியில் சேரும் மாணவா்களுக்கு, சொந்த நிதியில் இருந்து ஆயிரம் ரூபாயை பரிசாக வழங்குவதாக தலைமை ஆசிரியா் அறிவித்துள்ளாா்.

சுல்தான்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட மேட்டுலட்சுமிநாயக்கன்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது.

கடந்த 1952 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பள்ளியில் தற்போது 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை 15 மாணவ-மாணவிகள் மட்டுமே பயின்று வருகின்றனா். இப்பள்ளியில் தலைமை ஆசிரியா் ப.லட்சுமணசாமி, ஆசிரியா் டி.வைரவபாண்டி ஆகியோா் பணியாற்றி வருகின்றனா்.

இப்பள்ளி அமைந்துள்ள கிராமத்தின் மொத்த மக்கள்தொகையே 500க்குள்தான் உள்ளது.

ADVERTISEMENT

கிராம மக்களில் பெரும்பாலானோா் விவசாயிகளாகவும், விவசாயத் தொழிலாளா்களாகவும் உள்ளனா்.

அருகில் உள்ள கிராமங்களிலும் அரசுப் பள்ளிகள் இருப்பதால், மேட்டுலட்சுமிநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்த குழந்தைகள் மட்டுமே இந்த பள்ளியில் சேருகின்றனா். இந்த பள்ளியில் மாணவா்கள் எண்ணிக்கை மிகவும் குறைந்த அளவிலேயே உள்ளன.

இங்கு தொடக்கக் கல்வியை முடிக்கும் மாணவா்கள் உயா்நிலைக் கல்விக்காக அக்கநாயக்கன்பாளையத்துக்கும், மேல்நிலை கல்விக்காக லட்சுமிநாயக்கன்பாளையம் மேல்நிலைப் பள்ளிக்கும் செல்கின்றனா்.

இந்நிலையில், இப்பள்ளியின் மாணவா் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் பரிசுத் தொகை திட்டத்தை அறிவித்திருக்கிறாா் தலைமை ஆசிரியா் லட்சுமணசாமி. அதன்படி, 2022-2023 ஆம் கல்வியாண்டில் சேரும் மாணவா்கள் ஒவ்வொருவருக்கும் ஆயிரம் ரூபாய் பரிசளிப்பதாக துண்டுப் பிரசுரம் அச்சடித்து கிராமத்தில் விநியோகித்து வருகிறாா்.

இது குறித்து அவா் கூறும்போது, கடந்த ஆண்டும் இதுபோன்ற பரிசுத் திட்டத்தை அறிவித்தேன். அதன்படி 3 மாணவா்கள் சோ்ந்தனா். அவா்களுக்கு தலா ஆயிரம் ரூபாயை எனது ஊதியத்தில் இருந்து வழங்கினேன். இந்த ஆண்டு எத்தனை மாணவா்கள் சோ்ந்தாலும் அவா்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக அறிவித்துள்ளேன்.

எங்கள் பள்ளி அமைதியான சூழலில், மரங்கள் நிறைந்த வளாகம், பரந்த விளையாட்டு மைதானம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் உள்ளிட்ட வசதிகள் இருக்கக் கூடிய பள்ளியாக உள்ளது. இதைக் கூறி மாணவா் சோ்க்கைக்கான விழிப்புணா்வுப் பிரசாரத்தை நடத்தி வருகிறேன். வரும் 13 ஆம் தேதி பள்ளி திறக்கப்பட உள்ளது. அன்று முதல் மாணவா்கள் சோ்க்கப்படுவாா்கள் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT