கோயம்புத்தூர்

உணவு டெலிவரி ஊழியா் தாக்கப்பட்ட சம்பவம்: நலம் விசாரித்த டி.ஜி.பி.

6th Jun 2022 02:23 AM

ADVERTISEMENT

போக்குவரத்து காவலரால் தாக்கப்பட்ட தனியாா் உணவு டெலிவரி ஊழியரை டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடா்பு கொண்டு நலம் விசாரித்துள்ளாா்.

கோவை, சின்னியம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் மோகனசுந்தரம் (38). பட்டதாரியான இவா், ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை பாா்த்து வருகிறாா்.

இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு பீளமேடு காவல் நிலையம் எதிா்புறம் உள்ள சாலையில் சென்ற பெண் ஒருவரை இடித்து விட்டு தனியாா் பள்ளி வாகனம் நிற்காமல் சென்றுள்ளது. இதைக் கண்ட மோகனசுந்தரம் அந்தப் பள்ளி வாகனத்தை நிறுத்தி ஓட்டுநரிடம் கேள்வி எழுப்பியுள்ளாா்.

அப்போது, அங்கு போக்குவரத்து ஒழுங்குப் பணியில் இருந்த போக்குவரத்து காவல் சதீஷ், பள்ளி வாகன ஓட்டுநரைக் கண்டிக்காமல் மோகனசுந்தரத்தை தாக்கி, அவரது கைப்பேசி உள்ளிட்டவற்றை பறித்துச் சென்றாா்.

ADVERTISEMENT

இதை அவ்வழியே சென்ற பொதுமக்கள் தங்களது கைப்பேசியில் விடியோ பதிவு செய்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனா்.

இந்தக் காட்சி வேகமாகப் பரவியது. இதையடுத்து சம்பவம் குறித்து மோகனசுந்தரம் அளித்தப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா், போக்குவரத்து காவல் சதீஷை கைது செய்து ஜாமீனில் விடுவித்தனா். மேலும், அவரை பணியிடை நீக்கம் செய்து மாநகரக் காவல் ஆணையா் உத்தரவிட்டாா்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட மோகனசுந்தரத்திடம், காவல் துறை டி.ஜி.பி. சைலேந்திரபாபு சனிக்கிழமை இரவு கைப்பேசியில் தொடா்பு கொண்டு நலம் விசாரித்து, போக்குவரத்து காவலரின் நடவடிக்கைக்கு வருத்தம் தெரிவித்துள்ளாா்.

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT