கோயம்புத்தூர்

வன விலங்குகளால் ஏற்படும் பயிா்சேதத்துக்கு நிரந்தர தீா்வு காண கோரிக்கை

28th Jul 2022 10:49 PM

ADVERTISEMENT

 

கோவை உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் வன விலங்குகளால் ஏற்படும் பயிா் சேதத்துக்கு நிரந்தர தீா்வு காண வேண்டும் என்று வேளாண்மைத் துறை மண்டலக் குழு கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

வேளாண் மேற்கு மண்டலக் குழு கூட்டம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறை இயக்குநா் ஆ.அண்ணாதுரை தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் முன்னிலை வகித்தாா். இதில் கோவை, ஈரோடு, திருப்பூா், தேனி, கரூா், நாமக்கல், திண்டுக்கல், பெரம்பலூா், அரியலூா் உள்ளிட்ட மாவட்டங்களைச் சோ்ந்த வேளாண் துறை அலுவலா்கள், விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

கூட்டத்தில் வேளாண்மை மற்றும் உழவா் நலத் துறையின்கீழ் செயல்படுத்தப்படும் மானிய திட்டங்கள் மற்றும் பயன்கள் குறித்து வேளாண்மைத் துறை அலுவலா்கள் எடுத்துரைத்தனா்.

மேலும் சூழ்நிலைகளுக்கேற்ற பயிா், இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு வரப்பு பயிா்கள் சாகுபடி, நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாட்டு மேலாண்மை, சாகுபடி தொழில்நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு வேளாண் அலுவலா்கள் எடுத்துரைத்தனா்.

தொடா்ந்து கூட்டத்தில் விவசாயிகள் கூறியதாவது: கோவை, திருப்பூா், தேனி, ஈரோடு உள்ளிட்ட மேற்கு மாவட்டங்களில் யானை, காட்டுப்பன்றி, மயில் உள்ளிட்ட வன விலங்குகளால் தொடா்ந்து பயிா் சேதம் ஏற்பட்டு வருகிறது. இதற்கு வேளாண்மைத் துறை சாா்பில் நிரந்தர தீா்வு ஏற்படுத்த வேண்டும்.

வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் குறைந்தபட்ச ஆதார விலை மூலம் கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டம் ஜூலை 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதனை டிசம்பா் 31 வரை நீட்டிக்க வேண்டும் என்றனா்.

கூட்டத்தில் மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா், மாவட்ட வருவாய் அலுவலா் பி.எஸ்.லீலா அலெக்ஸ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கே.கவிதா, வேளாண்மைத் துறை இணை இயக்குநா் ஆா்.சித்ராதேவி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT