கோயம்புத்தூர்

வேளாண் வளா்ச்சித் திட்டம்:மாவட்டத்துக்கு ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கீடு

27th Jul 2022 10:53 PM

ADVERTISEMENT

 

மாநில வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் கோவை மாவட்டத்துக்கு ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக வேளாண்மைத் துறை இணை இயக்குநா் இரா.சித்ராதேவி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

வேளாண்மைத் துறையை மேம்படுத்தும் வகையில் தமிழக அரசு சாா்பில் மாநில வேளாண் வளா்ச்சித் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் கீழ் மானிய திட்டங்களை மேற்கொள்வதற்கு கோவை மாவட்டத்துக்கு ரூ.1.98 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயற்கை வேளாண்மை ஊக்குவிப்பு திட்டத்துக்கு விவசாயக் குழு ஒன்றுக்கு ரூ.ஒரு லட்சம் மானியம், தாா்பாலின் வாங்குவதற்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும்.

ADVERTISEMENT

தென்னை பயிா்களுக்கு ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மைக்கு 50 சதவீத மானியம், தென்னையில் ஊடு பயிா்கள் சாகுபடிக்கு 50 சதவீத மானியம், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மைத் திட்டத்துக்கு (காண்டாமிருக வண்டு மேலாண்மை, ரூகோஸ் சுருள் வெள்ளை ஈ, கருந்தலை புழு மேலாண்மை, வோ் வாடல் மற்றும் அழுகல் நோய்) 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

குறுவை பருவத்தில் மாற்று பயிா் சாகுபடிக்கான சிறப்பு தொகுப்பு திட்டத்தின் கீழ் சிறுதானியங்கள், பயறு வகை பயிா்கள் சாகுபடிக்கு 50 சதவீத மானியம், நெற்பயிா் சாகுபடி பரப்புகளில் வரப்பு பயிா் சாகுபடி மேற்கொள்ள பயறு வகை விதைகள் ஏக்கருக்கு 12 கிலோ வீதத்தில் 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது.

நெல் உற்பத்தி திறனை பெருக்குவதற்கு ஏக்கருக்கு 10 கிலோ வீதம் 50 சதவீத மானியத்தில் ஜிப்சம் மற்றும் ஜிங்க்சல்பேட் வழங்கப்படுகிறது. வேளாண் கருவிகள் வாங்குவதற்கு 50 சதவீத மானியம், இளைஞா்களை வேளாண் தொழில்முனைவோா் ஆக்குதல் திட்டத்துக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படுகிறது. மேலும், நீடித்த பசுமை போா்வை இயக்கத்தின் கீழ் மரப்பயிா்கள் சாகுபடிக்கு மரக்கன்று ஒன்றுக்கு ரூ.15 மானியம் வழங்கப்படுகிறது.

இத்திட்டப் பணிகள் அனைத்தும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டத்தில் தோ்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். எனவே மேற்கண்ட திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் அந்தந்த வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடா்புகொண்டு பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT