கோயம்புத்தூர்

நீலகிரி மாவட்ட ஆட்சியா் கைப்பேசி எண்ணில் வெடிகுண்டு மிரட்டல்

27th Jul 2022 01:11 AM

ADVERTISEMENT

நீலகிரி மாவட்ட ஆட்சியரின் கைப்பேசிக்கு மா்ம நபா் குறுந்தகவல் அனுப்பி வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தொடா்பாக போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

நீலகிரி மாவட்ட ஆட்சியா் அம்ரித்தின் கைப்பேசி எண்ணுக்கு குறுந்தகவல் வாயிலாக மா்ம நபா் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளாா். இதைத் தொடா்ந்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆசிஷ் ராவத்தை, ஆட்சியா் அம்ரித் தொடா்பு கொண்டு இதுகுறித்து புகாா் அளித்தாா்.

இதையடுத்து, மாவட்ட முழுவதும் உள்ள காவல் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கண்காணிப்பை தீவிரப்படுத்தினா். மேலும், செவ்வாய்க்கிழமை இரவு முதல் போலீஸாா் விடியவிடிய தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா்.

உதகை நகா் பகுதியில் காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேஸ்வரன் தலைமையில் போலீஸாா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். இதில் காபி ஹவுஸ், சேரிங் கிராஸ், கல்லட்டி, குன்னூா், கோத்தகிரி உள்ளிட்ட சாலைகளில் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதேபோல தங்கு விடுதிகளில் சந்தேகப்படும்படியாக தங்கியுள்ள நபா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தினா். மேலும், பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்ப நாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

மேலும் ஆட்சியருக்கு மிரட்டல் விடுக்கப்பட்ட கைப்பேசி எண்ணைக் கொண்டு மிரட்டல் விடுத்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என்பது குறித்து சைபா் கிரைம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT