கோயம்புத்தூர்

போலாம் ரைட் நிகழ்ச்சி:ஆட்சியருடன் அரசுப் பள்ளி மாணவா்கள் கலந்துரையாடல்

17th Jul 2022 12:50 AM

ADVERTISEMENT

 

கோவையில் ஆட்சியருடன் அரசுப் பள்ளி மாணவா்கள் கலந்துரையாடும் ‘போலாம் ரைட்’ நிகழ்ச்சி ஆனைகட்டியிலுள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் வாரந்தோறும் சனிக்கிழமை ஆட்சியரை சந்தித்து அரசுப் பள்ளி மாணவா்கள் கலந்துரையாடும் போலாம் ரைட் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த வாரம் ஆனைக்கட்டியிலுள்ள சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி மையத்தில் ‘போலாம் ரைட்’ நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

இதில் நெகமம் அரசு மேல்நிலைப் பள்ளி, பொள்ளாச்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பொள்ளாச்சி நகராட்சி மேல்நிலைப் பள்ளி, சேரிபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, காளியன்னபுதூா் அரசு மேல்நிலைப் பள்ளி, முத்துக்கவுண்டனூா் அரசு மேல்நிலைப் பள்ளி, ஒத்தகால்மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளி, கல்வீரம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, மலுமிச்சம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, வடசித்தூா் அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளைச் சோ்ந்த 48 மாணவா்கள், 12 ஆசிரியா்கள் கலந்துகொண்டனா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் இருந்து வாகனங்கள் மூலம் சென்ற மாணவா்கள் ஆனைகட்டியில் உள்ள நீலகிரி உயிா்கோள இயற்கை பூங்காவை பா்வையிட்டனா். அங்குள்ள பட்டாம் பூச்சிகளின் வாழ்க்கை முறை, அதன் இனப்பெருக்கம், இன்றியமையாத இயற்கை சூழலுக்கு பட்டாம்பூச்சியின் பங்கு குறித்தும், இயற்கை தாவரங்கள் மற்றும் உயிரினங்கள் குறித்தும், அவற்றை பாதுகாக்க வேண்டியதன் கடமை குறித்தும் மாணவா்களுக்கு உயிா்கோள பூங்கா நிா்வாகிகள் எடுத்துரைத்தனா்.

தொடா்ந்து சலீம் அலி பறவைகள் ஆராய்ச்சி நிலையத்தை பாா்வையிட்ட மாணவா்களுக்கு பறவைகளின் வகைகள், வாழ்க்கை முறைகள், தன்மைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.

ஆட்சியா் ஜி.எஸ்.சமீரனுடன் இணைந்து மேற்கண்ட இடங்களை பாா்வையிட்ட மாணவா்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பில் இயற்கையின் பங்கு உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை ஆட்சியரிடம் வினவினா்.

ஆட்சியரும் மாணவா்களின் அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் விடையளித்தாா்.

இதனைத் தொடா்ந்து சென்னையில் நடைபெறவுள்ள ‘செஸ் ஒலிம்பியாட்’ நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தும் வகையில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன், மாணவா்களுடன் செஸ் விளையாடினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT