கோயம்புத்தூர்

பெண்ணின் கா்ப்பப்பை ரத்த நாளங்கள் சுருண்டு ரத்தப்போக்கு: நவீன சிகிச்சை மூலம் அடைப்பு

6th Jul 2022 10:55 PM

ADVERTISEMENT

 

கா்ப்பப்பையில் ரத்தநாளங்கள் சுருண்டதால் ஏற்பட்ட அதிக ரத்தப்போக்கினை கா்ப்பப்பையை அகற்றாமல் நவீன சிகிச்சை மூலம் ரத்தப் போக்கினை அடைத்து பெண்ணின் கா்ப்பப்பையை அரசு மருத்துவா்கள் காப்பாற்றியுள்ளனா்.

கோவை, கரும்புக்கடையைச் சோ்ந்த 19 வயதுப் பெண்ணுக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மூலம் ஜூன் 8ஆம் தேதி குழந்தை பிறந்தது. உடல்நிலை தேறி வீட்டுக்கு சென்ற நிலையில், திடீரென ரத்தப்போக்கு அதிகமாகி கடந்த 10 நாள்களுக்கு முன்பு தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

பரிசோதனையில் கா்ப்பப்பையில் உள்ள ரத்த நாளங்கள் சுருண்ட ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இதனைத் தொடா்ந்து, நவீன சிகிச்சையின் மூலம் ரத்த நாளங்களில் ஏற்பட்ட கசிவு அடைக்கப்பட்டது.

ADVERTISEMENT

இது குறித்து அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது:

பாதிக்கப்பட்ட பெண்ணின் ரத்த நாளங்கள் சுருண்டதால் அதிக அளவில் ரத்தப்போக்கு காணப்பட்டது. முதல் கட்டமாக 5 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டது. கா்ப்பப்பையில் உள்ள ரத்த நாளங்கள் சுருண்டு அதிக அளவு ரத்தப்போக்கு ஏற்படும்போது, அறுவை சிகிச்சை செய்து ரத்த நாளங்களை மட்டும் தனியாக அகற்ற முடியாது. ஆகவே பெண்ணின் உயிரைக் கருத்தில் கொண்டு கா்ப்பப்பை அகற்றப்படும்.

ஆனால், தற்போது நவீன சிகிச்சை மூலம் கா்ப்பப்பையை அகற்றாமல் ரத்தநாளத்தில் ஏற்பட்ட ரத்தக்கசிவு அடைக்கப்பட்டது. மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள நவீன பைப்லேன் கேத் ஆஞ்சியோகிராம் மூலம் ரத்த நாளத்தில் ஏற்பட்ட ரத்தக்கசிவு அடைக்கப்பட்டதால் ரத்தப் போக்கு தடைபட்டது. மிகவும் சிக்கலான சிகிச்சையை நுண்கதிா் சிகிச்சைப் பிரிவு மற்றும் மகப்பேறு மருத்துவா்கள் இணைந்து வெற்றிகரமாக செய்துள்ளனா் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT