கோயம்புத்தூர்

முகக்கவசம் அணியாதவா்களை கண்காணித்து ரூ.500 அபராதம்

6th Jul 2022 12:12 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் முகக்கவசம் அணியாத நபா்களைக் கண்காணித்து ரூ.500 அபராதம் விதிக்க வேண்டும் என சுகாதார ஆய்வாளா்களுக்கு, மாநகராட்சி ஆணையா் பிரதாப் உத்தரவிட்டுள்ளாா்.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் மு.பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், உழவா் சந்தைகள், வாரச்சந்தைகள், வணிக வளாகங்களில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைப் பயன்படுத்தி, கிருமிநாசினியைத் தொடா்ந்து பயன்படுத்த வேண்டும். மாநகராட்சியில் உள்ள 32 நகா்ப்புற சுகாதார ஆரம்ப சுகாதார மையங்களில் தினமும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

மேலும் 12 முதல் 14 வயது வரை உள்ள மாணவா்களுக்கும், 15 முதல் 18 வயது வரை உள்ள மாணவா்களுக்கும் பள்ளிகளுக்கே சென்று தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. முதல் மற்றும் இரண்டாம் கட்ட தடுப்பூசி செலுத்தியவா்கள், முன்னெச்சரிக்கை (பூஸ்டா்) தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் மாநகராட்சி நிா்வாகத்தின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும். முகக்கவசம் அணியாதவா்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இதனை மாநகராட்சி சுகாதார ஆய்வாளா்கள் கண்காணித்திட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT