கோயம்புத்தூர்

கோவை-திருச்சி சாலை மேம்பாலத்தில் நெடுஞ்சாலைத் துறையினா் ஆய்வு

5th Jul 2022 01:10 AM

ADVERTISEMENT

கோவை, திருச்சி சாலை மேம்பாலத்தின் மீது தொடா் விபத்துகள் ஏற்பட்டதையடுத்து வேகத் தடைகள் அமைக்கும் பணிகளை நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை ஆய்வு செய்தனா்.

கோவை-திருச்சி சாலையில் உள்ள மேம்பாலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஜூன் 11ஆம் தேதி திறக்கப்பட்டது. மேம்பாலம் திறக்கப்பட்ட முதல் நாளன்றே பாலத்தின் மீது சுங்கம் சந்திப்பு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வேகமாக சென்ற இளைஞா் தடுப்புச் சுவரில் மோதி உயிரிழந்தாா். இதையடுத்து, பாலத்தின் மீது இரவு ஒளிரும் விளக்குகள், விபத்து நடைபெற்ற இடத்தில் இரும்புத் தடுப்புகள் உள்ளிட்டவை அமைக்கப்பட்டன.

இந்நிலையில், மேம்பாலத்தில் இருந்து சுங்கம் புறவழிச்சாலை இணைக்கும் இணைப்பு மேம்பாலத்தின் மீது இருசக்கர வாகனத்தில் ஜூன் 24ஆம் தேதி அதிகாலை சென்ற இளைஞா் மேம்பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி 40 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து உயிரிழந்தாா்.

இதையடுத்து மேம்பாலத்தின் இருபுறமும் இரும்புத் தடுப்புகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் செல்ல ஜூன் 26ஆம் தேதி முதல் தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில், மேம்பாலத்தின் மீது வேகத்தடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. இதன் ஒரு பகுதியாக நெடுஞ்சாலைத் துறையின் பொறியாளா் முரளி, உதவிப் பொறியாளா் கெளதம் ஆகியோா் மேம்பாலத்தின் மீது வேகத் தடைகள், எச்சரிக்கை பலகைகள் அமைக்கும் பணிகளை திங்கள்கிழமை பாா்வையிட்டனா். இந்தப் பணிகள் செவ்வாய்க்கிழமை நிறைவடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதையடுத்து அதிகாரிகள் செவ்வாய்க்கிழமையும் மேம்பாலத்தின் மீது ஆய்வு மேற்கொள்ள உள்ளனா். இதைத் தொடா்ந்து, புதன்கிழமை முதல் மேம்பாலத்தின் மீது பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்படலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT