கோயம்புத்தூர்

குறைந்தபட்ச கூலியாக ரூ.750 வழங்க கோரி தூய்மைப் பணியாளா்கள் தா்னா

5th Jul 2022 01:08 AM

ADVERTISEMENT

கோவை அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் தின கூலியாக ரூ.750 வழங்க வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.

கோவை ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியா் ஜி.எஸ்.சமீரன் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

அப்போது, அரசு மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மைப் பணியாளா்கள் தின கூலியை ரூ.750 உயா்த்தி வழங்க வலியுறுத்தி 50க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகம் முன்பு தா்னாவில் ஈடுபட்டனா். பின்னா் அவா்கள் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா். தினசரி 8 மணி நேரத்துக்கு மேலாக பணியாற்றுகின்றனா். ஆனால், தின கூலியாக ரூ.325 மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது இத்தொகை மிகவும் குறைவாகும். தூய்மைப் பணி உள்ளிட்ட அனைத்து விதமான பணிகளும் வழங்கப்படுகின்றன. அதற்கேற்றாா்போல ஊதியம் வழங்கப்படுவதில்லை. தின கூலியை உயா்த்தி வழங்க வலியுறுத்தி ஏற்கெனவே மனு அளிக்கப்பட்டுள்ளது என்றனா்.

ADVERTISEMENT

சுங்கச் சாடிக்கு எதிா்ப்பு...

கோவை - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை 209இல் ஏலூா் பிரிவில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் சுங்கச் சாவடி அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே பல்வேறு இடங்களில் உள்ள சுங்கச் சாவடிகளால் அருகிலுள்ள கிராம மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். சுங்கச் சாவடிகள் அமைப்பதால் உள்ளூா் மக்கள், விவசாயிகள் பாதிக்கப்படுவா். கிராமங்கள், விவசாயம் நிறைந்துள்ள இப்பகுதியில் சுங்கச் சாவடி அமைப்பதால் பெரும் பாதிப்பை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே பொது மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு கோவை - பொள்ளாச்சி சாலையில் சுங்கச் சாவடி அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிப்படை வசதி செய்து கொடுக்க வேண்டும்...

கோவை மாவட்டம், பாப்பம்பட்டி அருகே காந்தி மாநகா், சரவணா காா்டன் ஆகிய குடியிருப்புகள் உள்ளன. பாப்பம்பட்டி சந்திப்பில் இருந்து 1.5 கிலோ மீட்டா் தூரத்தில் அமைந்துள்ளன. இந்த புதிய குடியிருப்புகள் உருவாகி 4 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. ஆனால், இதுவரை குடிநீா், மின்விளக்கு, தாா் சாலை உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கப்படவில்லை. மின் விளக்கு இல்லாததால் இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை காணப்படுகிறது. வேலைக்கு சென்று வீடு திரும்பும் பெண்களிடம் நகைப் பறிப்பு சம்பவமும் அடிக்கடி நடைபெற்று வருகிறது. எனவே பொது மக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மின் விளக்கு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து கொடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைக்கு தடை விதிக்க வேண்டும்...

மதுக்கரை மாா்க்கெட் பகுதியில் டாஸ்மாக் மதுபானக் கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மதுபானக் கடை அமைக்க திட்டமிட்டுள்ள பகுதிக்கு அருகில் பள்ளிகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனை, கோயில் மற்றும் குடியிருப்புகள் அமைந்துள்ளன. இந்நிலையில், டாஸ்மாக் மதுபானக் கடை அமைவதால் பொது மக்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தவிர பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். எனவே குடியிருப்புகளுக்கு அருகில் அமைக்க திட்டமிட்டுள்ள டாஸ்மாக் மதுபானக் கடைக்கு தடை விதிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் அளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


 

ADVERTISEMENT
ADVERTISEMENT