கோயம்புத்தூர்

பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை: 24 மணி நேரத்தில் மீட்பு! 

4th Jul 2022 12:04 PM

ADVERTISEMENT

கோவை: கோவையில் உள்ள பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் கடத்தப்பட்ட பச்சிளம் குழந்தை 24 மணி நேரத்தில் மீட்கப்பட்டது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் குமரன் நகரை சேர்ந்த நிறை மாத கர்ப்பிணி திவ்ய பாரதி என்பவர் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்பு பிரசவத்திற்காக சேர்க்கப்பட்டார். அவருக்கு நான்கு நாட்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் ஆரோக்கியமாக இருப்பதாக கூரிய மருத்துவர்கள் டிஸ்சார்ஜ் செய்ய இருந்தனர். 

இந்நிலையில் நேற்று அதிகாலை 4 மணிக்கு திவ்யபாரதி அசந்து தூங்கி கண்விழித்து பார்த்த போது குழந்தையை காணாமல் திடுக்கிட்டார். உடனடியாக கிழக்கு காவல் நிலைய காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து விசாரணையில் ஈடுபட்டனர்.

இதையும் படிக்க: தங்கம் விலை சவரனுக்கு ரூ.144 உயர்வு

ADVERTISEMENT

மருத்துவமனை வளாகத்தில் கண்காணிப்பு கேமரா இல்லாததால், அருகில் இருந்த பள்ளிவாசல் கண்காணிப்பு கேமராவில் கல்லூரி மாணவிகள் போல் வந்த இரு பெண்கள் குழந்தையை கட்டப்பையில் வைத்து எடுத்துச் சென்றது தெரிய வந்தது. மேலும் அவர்கள் கோவை செல்ல பேருந்து நிலையத்திற்கு சென்ற காட்சிகளும் பதிவாகி இருந்தது. மருத்துவமனைக்கு வந்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குழந்தையை தேடி கண்டுபிடிக்க ஆறு தனிப்படை அமைத்து உத்தரவிட்டார். 

காவல்துறையினரின் தீவிர தேடுதலால் குழந்தையை காவலர்கள் பத்திரமாக மீட்டனர். இச்சம்பவத்தில் தொடர்புடைய ஒரு பெண்ணை கைது செய்துள்ளனர். மேலும் ஒரு பெண்ணை தேடி வருவதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

குழந்தையை அதிகாலை 4 மணிக்கு பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் பெற்றோர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒப்படைத்தார். குழந்தையை பெற்றுக் கொண்ட தாய் கண்ணீர் மல்க காவல்துறையினருக்கு நன்றி தெரிவித்தார். இச்சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கூறும்போது நேற்று அதிகாலை 4 மணிக்கு குழந்தை காணாமல் போனதாக தகவல் வெளியானது. 

உடனடியாக குழந்தையை கண்டுபிடிக்க ஆறு தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடத்தப்பட்டது. இதில் குழந்தை இருக்கும் இடம் தெரியபட்டு மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதற்கு சிசிடிவி கேமரா காட்சிகளும் மிக உதவியாக இருந்தது. எனவே அனைவரும் தங்கள் பகுதிகளில் சிசிடிவி கேமராக்களை அமைக்க வேண்டும் என கூறினார். 

மேலும் நேற்று அதிகாலை 4 மணிக்கு கடத்திய குழந்தை இன்று அதிகாலை 4 மணிக்கு  ஒப்படைக்கப்பட்டது. இதற்காக தீவிரமாக பணியாற்றிய காவல்துறையினரின் பணி பாராட்டுக்கு உரியதாகும் என தெரிவித்தார்.

குழந்தை காணாமல் போன சம்பவத்தால் பரபரப்பாக காணப்பட்ட மருத்துவமனை வளாகம் தற்போது இயல்பு நிலைக்கு திரும்பியது.

ADVERTISEMENT
ADVERTISEMENT