கோயம்புத்தூர்

கோவை வழித்தடத்தில் பாலக்காடு - ஈரோடு மெமு ரயில்: ஜூலை 29 முதல் இயக்கம்

2nd Jul 2022 05:38 AM

ADVERTISEMENT

கோவை வழித்தடத்தில் பாலக்காடு - ஈரோடு மெமு ரயில் ஜூலை 29 ஆம் தேதி முதல் மீண்டும் இயக்கப்படுகிறது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக கடந்த 2020 ஆம் ஆண்டு ரயில்வே போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது. இதில், பாலக்காட்டில் இருந்து கோவை வழித்தடத்தில் ஈரோட்டுக்கு இயக்கப்பட்டு வந்த மெமு ரயில் சேவையும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவல் வெகுவாகக் குறைந்ததால் 2021 ஆம் ஆண்டு முதல் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இருப்பினும் சில வழித்தடங்களில் ரயில்கள் இயக்கப்படாமல் இருந்தன.

பாலக்காடு, கோவை, திருப்பூரில் இருந்து பணிக்குச் செல்வோா், கல்லூரி செல்வோரின் வசதிக்காக இந்த ரயிலை மீண்டும் இயக்க வேண்டும் என்று பயணிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், பாலக்காடு - ஈரோடு ரயில் ஜூலை 29 ஆம் தேதி முதல் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, பாலக்காடு கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஜூலை 29 ஆம் தேதி முதல் வியாழக்கிழமைகள் தவிர பிற்பகல் 2.40 மணிக்கு பாலக்காட்டில் புறப்படும் மெமு ரயில் ( 06818) இரவு 7.10 மணிக்கு ஈரோடு நிலையத்தைச் சென்றடையும்.

ஜூலை 30 ஆம் தேதி காலை 7.15 மணிக்கு ஈரோட்டில் புறப்படும் மெமு ரயில் (எண்: 06819) இரவு 11.45 மணிக்கு பாலக்காடு டவுன் நிலையத்தைச் சென்றடையும்.

இந்த ரயிலானது, தொட்டிபாளையம், பெருந்துறை, ஈங்கூா், விஜயமங்கலம், ஊத்துக்குளி, திருப்பூா், வஞ்சிபாளையம், சோமனூா், சூலூா் சாலை, இருகூா், சிங்காநல்லூா், பீளமேடு, வடகோவை, கோவை, போத்தனூா், மதுக்கரை, எட்டிமடை, வாளையாறு, கஞ்சிக்கோடு உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT