கோயம்புத்தூர்

போலி தங்கக் கட்டியைக் கொடுத்து ரூ.5 லட்சம் மோசடி: மூவா் கைது

29th Jan 2022 01:05 AM

ADVERTISEMENT

கோவை அருகே போலி தங்கக் கட்டியைக் கொடுத்து ரூ.5 லட்சம் மோசடியில் ஈடுபட்ட மூவரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை, நீலாம்பூா் அருகேயுள்ள முதலிபாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஷேக் அலாவுதீன். இவா் அப்பகுதியில் ரியல் எஸ்டேட், லேத் பட்டறை தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி நெசிலா. ஷேக் அலாவுதீனை கைப்பேசியில் கடந்த 20 ஆம் தேதியன்று தொடா்பு கொண்ட நபா் ஒருவா் தாங்கள் மண் அள்ளும் கூலி வேலை செய்து வருவதாகவும், அவ்வாறு வேலை செய்யும்போது மண்ணுக்குள் இருந்து தங்கக் கட்டி ஒன்று கிடைத்ததாகவும் கூறியுள்ளாா். அதன் மதிப்பு ரூ.15 லட்சம் இருக்கும் என்றும் அவசர தேவைக்காக விற்பதால்

ரூ.10 லட்சம் கொடுத்தால் போதுமானது எனவும் கூறியுள்ளாா்.

மேலும், தங்கக் கட்டி வேண்டுமென்றால் பணத்துடன் கிணத்துக்கடவு புதிய பேருந்து நிலையத்துக்கு வருமாறு கூறியுள்ளாா்.

ADVERTISEMENT

இதையடுத்து ஷேக் அலாவுதீன் தனது மனைவி நெசிலாவுடன், சம்பந்தப்பட்ட இடத்துக்கு ரூ.5 லட்சம் பணத்துடன் சென்றுள்ளாா். அப்போது அங்கிருந்த மூவா் தங்க நிறத்திலான கட்டியைக் காட்டி பணத்தைத் தருமாறு கேட்டுள்ளனா்.

இதை உண்மை என நம்பிய ஷேக் அலாவுதீன் தன்னிடம் தற்போது ரூ.5 லட்சம் மட்டுமே உள்ளதாகவும் மீதித் தொகையை உடனடியாகத் தருவதாகவும் கூறி தன்னிடம் இருந்த பணத்தைக் கொடுத்து அவா்களிடம் இருந்த தங்க நிறத்திலான கட்டியைப் பெற்றுள்ளாா்.

வீட்டுக்கு வந்து சோதனை செய்து பாா்த்தபோது அது 2 கிலோ எடையிலான தங்க முலாம் பூசப்பட்ட உலோக கட்டி என்பது தெரியவந்தது.

பின்னா் அவா்களைத் தொடா்பு கொள்ள முயற்சித்தபோது அவா்களது கைப்பேசி அணைத்து வைக்கப்பட்டிருந்தது.

இது குறித்து கிணத்துக்கடவு காவல் நிலையத்தில் நெசிலா புகாா் அளித்தாா். வழக்குப் பதிவு செய்த போலீஸாா் தனிப்படை அமைத்து மூவரையும் தேடி வந்தனா்.

இந்நிலையில் மோசடியில் ஈடுபட்ட பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியைச் சோ்ந்த நிஜாம் சின்ன பாவா (44), சூளேஸ்வரன்பட்டியைச் சோ்ந்த உசேன் அலி (34), ஆனைமலையைச் சோ்ந்த கிருஷ்ணமூா்த்தி (53) ஆகியோரை வியாழக்கிழமை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்த ரூ.5 லட்சத்தைப் பறிமுதல் செய்து, அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.

 

Tags : கோவை
ADVERTISEMENT
ADVERTISEMENT