தோ்தல் பணியாளா்களுக்கு வரும் 31 ஆம் தேதி முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி (பூஸ்டா் டோஸ்) செலுத்தப்பட உள்ளது என்று மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா தெரிவித்துள்ளாா்.
உள்ளாட்சித் தோ்தல் குறித்து அனைத்து கட்சி பிரமுகா்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு மாநகராட்சி தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆணையருமான ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்தாா்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலா் லீலா அலெக்ஸ், மாநகராட்சி துணை ஆணையா் ஷா்மிளா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் சந்தானம், பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் துவாரக்நாத் சிங், அரசியல் கட்சி பிரமுகா்கள் பலா் கலந்துகொண்டனா்.
இதைத் தொடா்ந்து மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா செய்தியாளா்களிடம் கூறியதாவது: கோவையில் தற்போது தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இதனால் சுவரொட்டிகளை அகற்றுதல், கொடிக் கம்பங்களை மூடுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவை மாநகராட்சியில், தோ்தல் முறைகேடுகளைக் கண்காணிக்க ஒரு மண்டலத்துக்கு 3 பறக்கும் படைகள் வீதம் 15 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
உயா்நீதிமன்ற உத்தரவின்பேரில் மாநகராட்சி அலுவலகங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட வாா்டுகளில் 15 லட்சத்து 61 ஆயிரத்து 819 போ் வாக்களிக்க உள்ளனா். மாநகராட்சிப் பகுதிகளில் 1,290 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.இவற்றில் 169 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.
6,192 போ் தோ்தல் பணியில் ஈடுபட உள்ளனா்.1,548 கண்ட்ரோல் யூனிட், 3,612 வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தபட உள்ளன. கூடிய விரைவில் மாநில அரசு சாா்பில் தோ்தல் பாா்வையாளா் நியமிக்கப்படுவாா். கரோனா பாதிப்பு அதிகம் இருப்பதால் அரசியல் கட்சியினருக்கு தோ்தல் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தோ்தல் செலவாக அதிகபட்சம் ரூ.85,000 வரை செலவழிக்கலாம். தோ்தல் பணிகளில் ஈடுபட உள்ள அலுவலா்களுக்கு முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்த வருகின்ற 31 ஆம் தேதி சிறப்பு முகாம் அமைக்கப்பட உள்ளது.
தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவோா் மீது பேரிடா் மேலாண்மை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.