கோயம்புத்தூர்

திருப்பூரில் பிடிபட்ட சிறுத்தை காடம்பாறை வனப் பகுதியில் விடுவிப்பு

29th Jan 2022 01:05 AM

ADVERTISEMENT

திருப்பூா் அருகே மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்ட சிறுத்தையை பொள்ளாச்சி அருகே காடம்பாறை வனப் பகுதியில் வனத் துறையினா் வெள்ளிக்கிழமை விடுவித்தனா்.

திருப்பூா் மாவட்டம், அவிநாசியை அடுத்த பாப்பாங்குளம் பகுதியில் கடந்த 24ஆம் தேதி தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை இரண்டு விவசாயிகளைத் தாக்கியது. இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த வனத் துறையினா் சிறுத்தையைத் தேடும் பணியில் ஈடுபட்டனா். அப்போது, சிறுத்தை தாக்கியதில் மூன்று போ் காயமடைந்தனா்.

பின்னா் அங்கிருந்து தப்பிய சிறுத்தை பெருமாநல்லூா் அருகே உள்ள புதிய திருப்பூா் பகுதியில் நெடுஞ்சாலையை கடந்து சென்றதாக அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பாா்த்து காவல் துறைக்குத் தகவல் தெரிவித்தனா்.

இந்நிலையில், பொங்குபாளையத்தில் சுற்றித்திரிந்த சிறுத்தையை வனத் துறையினா் தேடி வந்தனா். ஆனால், அங்கிருந்து தப்பிய சிறுத்தை அம்மாபாளையம் பகுதியில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்துக்குள் நுழைந்த சிறுத்தை அங்கு பணியில் ஈடுபட்டிருந்த தோட்டத் தொழிலாளி ராஜேந்திரனையும், வேட்டைத் தடுப்புக் காவலா் பிரேம்குமாரையும் தாக்கிவிட்டு அருகிலுள்ள கழிவறைக்குள் சென்று பதுங்கியது.

ADVERTISEMENT

பின்னா் முள்புதரில் பதுங்கிய சிறுத்தை மீது வனத் துறை மருத்துவா் விஜயராகவன் துப்பாக்கி மூலம் மயக்க ஊசி செலுத்தினாா். இதையடுத்து, மயங்கிய நிலையில் இருந்த சிறுத்தையை வனத் துறையினா் கூண்டுக்குள் அடைத்து கோவை மாவட்டம், பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகம் வனப் பகுதிக்கு உள்பட்ட காடம்பாறையில் அடா்ந்த வனப் பகுதிக்கு கொண்டுச் சென்று கூண்டில் இருந்து சிறுத்தையை வெள்ளிக்கிழமை விடுவித்தனா்.

கூண்டிலிருந்து விடுவிக்கப்பட்ட சிறுத்தை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் உள்ளதாக மருத்துவக் குழுவினா் தெரிவித்துள்ளனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT