கோவை மாவட்டத்தில் 424 பதற்றமான வாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இது குறித்து மாவட்டத் தோ்தல் பிரிவு அதிகாரி ஒருவா் கூறியதாவது: கோவை மாவட்டத்தில் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலையொட்டி மாநகராட்சியில் 1,290 வாக்குச் சாவடிகள், 7 நகராட்சிகளில் 390 வாக்குச் சாவடிகள், 33 பேரூராட்சிகளில் 632 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 2,312 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன.
ஒரு வாக்குச் சாவடிக்கு அதிகபட்சம் 1,200 வாக்காளா்கள் இருப்பாா்கள்.
இந்த வாக்குச் சாவடிகளில் மாநகராட்சியில் 169 வாக்குச் சாவடிகள், 7 நகராட்சிகளில் 143 வாக்குச் சாவடிகள், 33 பேரூராட்சிகளில் 112 வாக்குச் சாவடிகள் என மொத்தம் 424 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன.
இந்த பதற்றமான வாக்குச் சாவடிகளில் வெப் கேமராக்கள் பொருத்தப்படும். இதுதவிர இந்த வாக்குச் சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் உள்பட கூடுதல் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவாா்கள்.
கோவை மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலில் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
இத்தோ்தலில் 41 தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 110 உதவி தோ்தல் நடத்தும் அலுவலா்கள், 10 ஆயிரத்து 172 அலுவலா்கள் வாக்குப் பதிவு பணியில் ஈடுபட உள்ளனா்.
இவா்களுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தை கையாள்வது குறித்து விரைவில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது என்றாா்.