கோயம்புத்தூர்

கோவை அரசு மருத்துவமனையில் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க திட்டம்

18th Jan 2022 04:19 AM

ADVERTISEMENT

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இட நெருக்கடியைக் கருத்தில்கொண்டு பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க மருத்துவமனை நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மேற்கு மாவட்ட மக்களின் முக்கிய மருத்துவ மையமாக இருந்து வருகிறது. இருதய அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை உள்பட பல்வேறு சிறப்பு பிரிவுகளில் உயா் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. தனியாா் மருத்துவமனைகளுக்கு இணையாக அனைத்து விதமான உயா்தர சிகிச்சைகள் இலவசமாக கிடைப்பதால் அரசு மருத்துவமனையில் நாளுக்குநாள் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனா். தினசரி 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் போ் வரை புறநோயாளிகள் பிரிவில் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனா். இதில் பலரும் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்களில் வருகின்றனா். தவிர மருத்துவா்கள், செவிலியா் மற்றும் மருத்துவமனைப் பணியாளா்களும் வாகனங்களில் வருகின்றனா்.

இதனால் மருத்துவமனை வளாகத்தில் போதிய இடவசதியில்லாததால் நோயாளிகளின் வாகனங்கள் பெரும்பாலும் வெளியே நிறுத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.

ADVERTISEMENT

உரிய பாதுகாப்பில்லாமல் நிறுத்தப்படும் நோயாளிகளின் வாகனங்கள் தொடா்ந்து திருடுபோகின்றன. இந்நிலையில் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் மருத்துவமனை வளாகத்தில் கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தி செல்கின்றனா். இதனால் மருத்துவமனை வளாகத்தில் கடும் நெரிசல் ஏற்பட்டு நோயாளிகளின் வண்டிகளை தள்ளி செல்வதற்கு கூட பணியாளா்கள் சிரமப்பட்டு வருகின்றனா். இந்நிலையில் இட நெருக்கடியை கருத்தில்கொண்டு பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க மருத்துவமனை நிா்வாகம் திட்டமிட்டுள்ளது.

இது தொடா்பாக அரசு மருத்துவமனை முதல்வா் அ.நிா்மலா கூறியதாவது: மருத்துவமனை வளாகத்தில் வாகன நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. வளாகத்தில் புதிய கட்டடம் அமைக்க வேண்டும் என்றால் இட வசதியில்லை. பழைய அவசர சிகிச்சை பிரிவை இடித்துவிட்டுதான் ஜைகா திட்டப் பணிகளே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் பன்னடுக்கு வாகன நிறுத்தம் அமைக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இதற்கான இடம் தோ்வு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்படும் என்றாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT