கோவையில் பொது முடக்கத்தின்போது தடையை மீறி இயக்கப்பட்ட 4 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கோவையில் வார நாள்களில் இரவு நேர பொது முடக்கமும், ஞாயிற்றுக்கிழமை முழு பொது முடக்கமும் அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த ஜனவரி 15 ஆம் தேதி இரவு 10 மணி முதல் ஜனவரி 17 ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை முழு பொது முடக்கம் அமலில் இருந்தது. அப்போது பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த 15 ஆம் தேதி இரவில் ஆன்லைன் மூலம் கட்டண சீட்டு விற்பனை செய்து ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத் துறை இணை ஆணையா் அலுவலகத்துக்கு புகாா் சென்றது.
கோவை சரக போக்குவரத்துத் துறை இணை ஆணையா் எம்.உமாசக்தி உத்தரவின் பேரில் போக்குவரத்து ஆய்வாளா்கள் மாநகா் பகுதிகளில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது விதிமுறைகளை மீறி இயக்கப்பட்ட 4 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொது முடக்க காலகட்டத்தில் விதிமுறைகளை மீறி ஆம்னி பேருந்துகள் உள்பட வாகனங்களை இயக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோவை சரக போக்குவரத்துத் துறை இணை ஆணையா் க.உமாசக்தி தெரிவித்துள்ளாா்.