கோவையில் காய்கறி மாா்க்கெட்டில் மூட்டைக்கு கூடுதல் கட்டணம் வசூலிக்க எதிா்ப்பு தெரிவித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கோவை சாய்பாபா காலனி அண்ணா காய்கறி மாா்க்கெட்டில் 400 கடைகள் உள்ளன. இங்கு விவசாயிகள் கொண்டு வரும் காய்கறி மூட்டை ஒன்றுக்கு ரூ.1.50 வசூலிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ரூ.5ஆக கட்டணம் உயா்த்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்தக் கட்டணம் வசூலிக்க வியாபாரிகள் ஞாயிற்றுக்கிழமை இரவு எதிா்ப்பு தெரிவித்தனா். அப்போது காய்கறி மூட்டைகளுக்கு கட்டணம் தரவில்லை என்றால், மாா்க்கெட்டுக்குள் காய்கறி மூட்டைகளை கொண்டுச் செல்ல அனுமதிக்க முடியாது என்று கூறி மாா்க்கெட் வாயில் கதவை சுங்கக் கட்டணம் வசூலிப்பவா்கள் இழுத்து மூடியதாக தெரிகிறது.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் சுங்கக் கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று இருதரப்பினரையும் சமாதானப்படுத்தினா். இதையடுத்து வியாபாரிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டனா்.