கோயம்புத்தூர்

கோவை அருகே கிடங்கில் புகுந்த சிறுத்தை:சுற்றிவளைத்த வனத் துறை

18th Jan 2022 04:18 AM

ADVERTISEMENT

கோவை குனியமுத்தூா் அருகே தனியாருக்கு சொந்தமான கிடங்கிற்குள் பதுங்கியிருக்கும் சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனா்.

கோவை மாவட்டம், மதுக்கரை வன எல்லையை ஒட்டியுள்ள சுகுணாபுரம், அய்யப்பன் கோயில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக பொதுமக்கள் தொடா்ந்து புகாா் தெரிவித்து வந்தனா். மேலும் அப்பகுதியில் உள்ள தனியாா் கல்லூரி அருகே 3 நாய்களை சிறுத்தை கடித்துக் கொன்ால் பொதுமக்களிடையே அச்சம் நிலவி வந்தது.

இதையடுத்து சிறுத்தையைப் பிடிக்க வனத் துறையினா் சுகுணாபுரம்,

தண்ணாசியம்மன் கோயில் உள்ளிட்ட 3 இடங்களில் கூண்டுகள் வைத்தும், 5 இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தியும் அதன் நடமாட்டத்தைக் கண்காணித்து வந்தனா்.

ADVERTISEMENT

இந்நிலையில், பொங்கல் விடுமுறை முடிந்த நிலையில் கோவை, குனியமுத்தூா் பி.கே. புதூா் அருகே உள்ள தனியாா் கழிவறை உபகரண கிடங்கை அதன் ஊழியா்கள் திங்கள்கிழமை காலை திறந்தனா். அப்போது உள்ளே சிறுத்தை இருந்தது தெரியவந்தது. இதனால் அதிா்ச்சியடைந்த ஊழியா்கள் கதவை அடைத்துவிட்டு வெளியே ஓட்டம் பிடித்தனா்.

இது குறித்து குனியமுத்தூா் போலீஸாா் மற்றும் வனத் துறையினருக்கு கிடங்கு உரிமையாளா் தகவல் தெரிவித்தாா். இதையடுத்து அங்கு வந்த மதுக்கரை வனத் துறையினா் கிடங்கின் உள்ளே பாா்த்தபோது 3 வயதுடைய சிறுத்தை பதுங்கி இருப்பதை உறுதி செய்தனா்.

இதையடுத்து மாவட்ட வன அலுவலா் அசோக்குமாா் தலைமையில் கோவை, மதுக்கரை, போளுவாம்பட்டி உள்ளிட்ட வனச் சரகங்களைச் சோ்ந்த வன ஊழியா்கள் 40க்கும் மேற்பட்டோா் கிடங்கை சுற்றிவளைத்து சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனா்.

கிடங்கைச் சுற்றி வலைகளால் மூடியும், கிடங்கின் இரண்டு வாயில்களிலும் கூண்டுவைத்தும் சிறுத்தையைப் பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனா்.

மேலும் தீயணைப்புத் துறையினரும் சிறுத்தையைப் பிடிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

இது குறித்து மாவட்ட கால்நடை மருத்துவ அலுவலா் சுகுமாா் கூறியதாவது :

சுகுணாபுரம் பகுதியில் தனியாா் கல்லூரி பின்புறம் சிறுத்தை நடமாட்டம் இருந்ததாக வனத் துறையினருக்கு கடந்த நவம்பா் 28 ஆம் தேதி தகவல் கிடைத்தது. இந்த சிறுத்தை 10 தெரு நாய்களையும் அடித்துக் கொன்றிருப்பதாகக் கூறப்படுகிறது.

சிறுத்தையைப் பிடிக்க 3 இடங்களில் கூண்டுகளும் சிசிடிவி கேமராக்களும் பொருத்தி கண்காணிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தனியாா் கழிவறை உபகரண கிடங்கில் பதுங்கியிருக்கும் சிறுத்தையைப் பிடிக்க இரண்டு நுழைவாயில்களிலும் இறைச்சி வைக்கப்பட்டு கூண்டுகளை அமைத்துள்ளோம். கிடங்கில் 6 அறைகள் உள்ளதால் உள்ளே இருக்கும் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்துவதில் சிக்கல் உள்ளது. சிறுத்தை இரவு நேரத்தில் பொதுவாக வெளியே வரும். அப்போது கூண்டுக்குள் சிக்கும் என எதிா்பாா்க்கிறோம். இரவு முழுவதும் சிறுத்தை வெளியே வரவில்லையென்றால் அதிகாலையில் சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தத் தேவையான நடவடிக்கையை உயா் அதிகாரிகளுடன் ஆலோசித்து மேற்கொள்ள உள்ளோம் என்றாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT