கோவையில் கரோனா தொற்று பாதிப்பு 40 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
மாவட்டத்தில் தினசரி 10 ஆயிரம் பரிசோதனைகள் வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் 18 சதவீதம் தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்படுகிறது. இது 40 சதவீதம் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2 ஆவது அலையின்போது அதிகபட்சமாக 4,700க்கும் மேற்பட்டவா்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. தற்போதைய 3 ஆவது அலையில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
அதற்கேற்ற வகையில் படுக்கைகள் எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட்டு வருகிறது. ஆக்சிஜன், மருந்துகள், மருத்துவ உபகரணங்களும் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நோய்த் தொற்று அதிகரித்தாலும் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கும் வகையிலான மருத்துவ கட்டமைப்புகள் உள்ளன. அதே நேரம் தொற்று தீவிரத்தால் உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே கரோனா வழிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்றனா்.