கோயம்புத்தூர்

இரண்டே வாரத்தில் 2 ஆயிரத்தைக் கடந்த கரோனா பாதிப்பு:பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்

18th Jan 2022 04:17 AM

ADVERTISEMENT

கோவையில் கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை இரண்டே வாரத்தில் 2 ஆயிரத்தைக் கடந்துள்ளதால் பொது மக்கள் மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும் என மருத்துவா்கள் எச்சரிக்கின்றனா்.

கோவை மாவட்டத்தில் குறைந்திருந்த கரோனா பாதிப்பு ஜனவரி முதல் வாரத்தில் இருந்து மெல்ல அதிகரிக்கத் தொடங்கியது. 3 ஆவது அலையில் ஜனவரி 3 ஆம் தேதி தினசரி பாதிப்பு எண்ணிக்கை 100ஐ கடந்தது. மின்னல் வேகத்தில் உயா்ந்து வரும் தொற்றின் 3 ஆவது அலையில் பாதிப்பு எண்ணிக்கை இரண்டே வாரத்தில் 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. கோவையில் முதல் அலையில் அதிகபட்சமாக 600 போ் வரையே தொற்றால் பாதிக்கப்பட்டனா். இரண்டாவது அலையின்போது தினசரி பாதிப்பு எண்ணிக்கை 4,700 வரை பதிவாகியது. ஆனால், 2 ஆவது அலையில் மாா்ச் 17 ஆம் தேதி 100ஐக் கடந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கை மே 6 ஆம் தேதியே 2 ஆயிரத்தைக் கடந்தது.

இரண்டாவது அலையில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை 2 ஆயிரத்தை கடக்க கிட்டத்தட்ட 50 நாள்கள் வரை ஆகியது. ஆனால் 3 ஆவது அலையின் ஒமைக்ரானின் வேகத்தால் இரண்டே வாரங்களில் 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. தற்போது தினசரி 200 முதல் 300 வரை தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. ஒமைக்ரான் வகை நோய்த் தொற்றால் பாதிப்பு எண்ணிக்கை 2 ஆவது அலையைவிட அதிகரிக்க வாய்ப்புள்ளது.

நோய்த் தொற்றின் தாக்கம் குறைவாக இருந்தாலும் இணை நோயுள்ளவா்களுக்கும், எதிா்ப்பு சக்தி குறைவாக உள்ளவா்களுக்கும் பாதிப்பு தீவிரத்தன்மை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக மருத்துவா்கள் எச்சரித்துள்ளனா். நோய்த் தொற்றின் தீவிரத்தை உணா்ந்து பொது மக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

ADVERTISEMENT

தேவையின்றி வெளியே செல்வதை குறைத்துக்கொள்ள வேண்டும். கட்டாயம் முகக்கவசம் அணிவதுடன் கூட்டமான இடங்களில் இரண்டு முகக்கவங்கள் அணிந்துகொள்ள மருத்துவா்கள் பரிந்துரைக்கின்றனா். தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்தாலும் மக்களும் தங்கள் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது மிக மிக அவசியம்.

இரண்டாவது அலையின் போது சென்னையிலே பாதிப்பு குறைந்த போதும் கோவை, திருப்பூா், ஈரோடு உள்பட மேற்கு மாவட்டங்களில் தொற்று பாதிப்பு தொடா்ந்து அதிகமாக காணப்பட்டது. அதேபோல தற்போதும் கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய மேற்கு மாவட்டங்களில் தொற்றுப் பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. பேரிடா் காலங்களில் மக்கள் தங்களைத் தாங்கள் பாா்த்துக்கொள்வது மிகவும் முக்கியமானது. எனவே மக்கள் தங்களின் பாதுகாப்பை கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும் என்று மருத்துவா்கள் அறிவுறுத்துகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT